Vijay's 44th birthday: மாண்புமிகு மாணவனில் விதையாய் விதைக்கப்பட்டு, சர்காரில் ஆலமரமாய் படர்ந்து நிற்கும் தளபதி, ரசிகர்களின் நாயகனாகத் தோன்றிய நாள் இன்று. நடிகர் விஜய் தனது 44வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஒவ்வொரு வருடம் போல, இந்த ஆண்டும் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் என்ற மாஸ் ஹீரோவின் உதயம்:
1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி, இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா தம்பதிக்குப் பிறந்தவர் ஜோசப் விஜய். 1984ம் ஆண்டில் இருந்து 1988ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த இவருக்கு, கதாநாயகன் ரோலில் நடிக்கும் வாய்ப்பு 1992ம் ஆண்டில் கிட்டியது. இவரின் முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ இவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கவில்லை என்றாலும், 1996ம் ஆண்டு வெளிவந்த ‘பூவே உனக்காக’ வெற்றி வாகை சூடி அனைவரின் மனதையும் கவர்ந்தார் விஜய். பின்னர் கதாநாயகி டிம்பிளுடன் ஜோடி சேர்ந்த முதல் காதல் படம் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’.
அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வெளியான பல படங்கள் விஜய்-ன் சினிமா வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை எட்டியது. லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என அனைத்துமே மக்களின் கவனத்தை விஜய் பக்கம் இழுத்தது. குறிப்பாகக் காதலுக்கு மரியாதை படத்தில் பெண்களின் மனதை விஜய் கவர, அவர் மீது அதிக அளவிலான மரியாதையை தேடிக் கொடுத்தது துள்ளாத மனமும் துள்ளும்.
2000ம் ஆண்டில், பெண்களின் கண்ணுக்குள் நிலவாகத் தோன்றிய இவர், பிரியமானவனாக இருந்து அனைவரையும் குஷிப்படுத்தினார். 1997ம் ஆண்டின் நேருக்கு நேர் படத்திற்கு பிறகு, 2001ம் ஆண்டில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்தார். சூர்யாவின் நண்பனாக நடித்த இப்படத்தில் விஜயின் நடிப்பு அனைவரையும் உருக வைத்தது. இளம் வயதில் இருவரும் அடிக்கும் லூட்டியால் நம்மைச் சிறு வயது நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் விஜய், கிளைமேக்ஸில் நம் அனைவரையும் கண் கலங்க வைக்கிறார்.
அதன் பிறகு பத்ரி, தமிழன், யூத், பகவதி, வசீகரா, புதிய கீதை என பல்வேறு கதைக் கோணங்களில் நம்மை உற்சாகப்படுத்தினார். 2003ம் ஆண்டிற்குப் பிறகு, இவர் கையில் எடுத்த பிராஜெக்டுகள் எல்லாமே மாஸ் ஹிட். ஜோதிகாவுக்கு ஜோடியாக ‘திருமலை’யில் நடித்த இவர், மீண்டும் சிம்ரனுடன் இணைந்து நடித்த படம் ‘உதயா’.
ஊரே கிரிக்கெட் பின்னால் சென்றிருக்கும்போது, கபடி விளையாட்டில் இருக்கும் உற்சாகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த படம் ‘கில்லி’. திரிஷாவை எதற்சியாக காப்பாற்ற முயன்று, வில்லன் பிரகாஷிடம் மாட்டிக்கொள்கிறார் விஜய். ஆனால் இதுவரை பார்க்காத அளவிற்கு, வில்லனையே ஹீரோ புரட்டிப்போடெடுத்த படம் அது. இப்படி தொடர்ச்சியாக மதுரை, திருப்பாச்சி, சிவகாசி எனப் பல ஆக்ஷன் படங்கள் வந்தாலும், பெண்கள் மனதில் பல சிக்ஸர்கள் அடித்தது சச்சின் தான்.
விஜய்யின் போக்கிரி பொங்கலை மறந்தவர்கள் யாராவது உண்டா? பிரபு தேவா இயக்கத்தில், விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் பிளாக் பஸ்டராக அமைந்தது. அதன் பின்பு வெளியான விஜய்யின் வில்லு, வேட்டைக்காரன், காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி, தெறி என அனைத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.
இறுதியாக வெளியான அவரின் மெர்சல், படத்தில் விஜய் நடித்த மூன்று கெட்டப்புகளும் மெர்சல் மாஸாக அமைந்தது. இந்நிலையில் இவரின் பிறந்தநாளையொட்டி, விஜய் 62 என ரகசியமாக இருந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியாந்து. இப்படத்திற்கு ‘சர்கார்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் உங்கள் உள்ளங்களை ஆள தீபாவளி ரிலீசாக வருகிறது.