Advertisment

ஸ்ரீரெட்டி டிக்-டாக்... வனிதாவுடன் சினிமா..! கோலிவுட்டை தேடி வந்த ‘நடமாடும் நகைக்கடை’ பின்னணி

ஹரி நாடார் தொங்க விட்டிருக்கும் நகைகளுக்கு ஒன்றல்ல, 3 படங்கள் எடுக்கலாம் என இணையத்தில் கமெண்ட்கள் வந்து விழுகின்றன.

author-image
WebDesk
New Update
ஸ்ரீரெட்டி டிக்-டாக்... வனிதாவுடன் சினிமா..! கோலிவுட்டை தேடி வந்த ‘நடமாடும் நகைக்கடை’ பின்னணி

Hari Nadar and vanitha vijayakumar in tamil movie: தமிழகத்தில் இன்று ‘வைரல் மனிதர்’ என்றால், அது ஹரி நாடார் தான்! கழுத்தைத் தாண்டி புரளும் தலைமுடி, தோள், கை, கால் என மானாவாரியாக தொங்கும் நகைகள்... இவைதான் ஹரி நாடாருக்கு அடையாளம். இவரது சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளம். தென் மாவட்ட நாடார் சமூகப் பிரமுகரான ராக்கெட் ராஜா நடத்திய நாடார் மக்கள் சக்தி என்கிற இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளராக 2015 வாக்கில் அறியப்பட்டவர் இந்த ஹரி நாடார்.

Advertisment

2016-ல் அதிமுக எம்.பி சசிகலா மாநிலங்களவையில் ஜெயலலிதா தன்னை அடித்ததாக பகிரங்கமாக புகார் கூறினார். அதைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா தமிழகம் திரும்பியபோது, அவருக்கு பாதுகாப்பாக உடன் வந்தவர் இந்த ஹரி நாடார். அந்தக் காலகட்டத்தில் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பெண் வழக்கறிஞர் ஒருவருடன் மோதினார் இவர். அது தொடர்பான வழக்குகள் இவர் மீது பாய்ந்தன. மொத்தம் சுமார் 10 வழக்குகளில் தொடர்புடைய ஹரி நாடார் குண்டர் சட்டத்திலும் கைதானார்.

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து, அரசியல் ரீதியான நெருக்கடிகள் இவருக்கு குறைந்தன. இதற்கிடையே நாடார் மக்கள் சக்தி இயக்கத்தை பனங்காட்டு படை என்கிற பெயரில் கட்சியாக மாற்றினார் ராக்கெட் ராஜா. அதில் ஒருங்கிணைப்பாளர் பதவி ஹரி நாடாருக்கு கிடைத்தது. இந்தப் பதவியுடன் நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அவர் 4,200 வாக்குகளை அள்ளினார். குறிப்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரையும் முந்திக்கொண்டு, அங்கு இவர் 3-வது இடத்தைப் பெற்று ஆச்சர்யப்படுத்தினார்.

தனது சொத்தாக நான்கரை கிலோ தங்கமும், தனது மனைவியின் சொத்தாக 3 கிலோ தங்கமும் வைத்திருப்பதாக நாங்குனேரி இடைத்தேர்தலின்போது வேட்புமனு படிவத்தில் தெரிவித்திருந்தார் ஹரி நாடார். அந்த நகையைத்தான் எப்போதும் உடல் முழுக்க தொங்கவிட்டபடி வளைய வருகிறார்.

‘சின்ன வயதிலேயே நீளமாக முடி வளர்ப்பதிலும், நகைகள் அணிவதிலும் எனக்கு ஆசை. பண வசதி இல்லாத காரணத்தால், முடி மட்டும் வளர்த்தேன். இப்போது பண வசதியும் இருப்பதால் நகைகளையும் அணிகிறேன்’ என தனது இந்த ‘கெட்டப்’பிற்கு விளக்கம் கூறுகிறார் ஹரி நாடார். இந்த நகைகளுக்கு பணம் எங்கிருந்து வந்தது? எனக் கேட்டால், ‘இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டினருக்கு வேண்டிய உதவிகளை செய்கிறேன். அரசு உரிமம் பெற்று வட்டித் தொழிலும் செய்கிறேன்’ என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் ஹரி நாடார்.

சினிமா மீதும் தீராத ஆசை ஹரி நாடாருக்கு உண்டு. அந்த அடிப்படையில் சில படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்திருக்கிறார். அப்போது சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டியுடன் இவருக்கு அறிமுகம் கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்த டிக்- டாக் வீடியோ இணையத்தை கலக்கியது. ஸ்ரீரெட்டி அறிமுகம், இவருக்கு சினிமா ஆசையை இன்னும் அதிகப்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். அதன் எதிரொலிதான் லேட்டஸ்டாக வனிதா விஜயகுமாருடன் இணைந்திருக்கும் அடுத்த புராஜக்ட்!

2கே காதல் அழகானது என்கிற படத்தில் ஹரி நாடாரும், வனிதா விஜயகுமாரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பது, ஹரி நாடாரேதான். சென்னையில் நடைபெற்ற பட பூஜை விழாவுக்கு ஆர்.பி.செளத்ரி போன்ற பெரும் தயாரிப்பாளர்களை அழைத்து வந்து அசத்தினார் ஹரி நாடார். வனிதா விஜயகுமாரும் அந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ‘ஹரி நாடாருடன் பேசிய பிறகுதான் அவர் எனக்கு தூரத்து உறவினர் என புரிந்தது. இந்தப் படத்தின் கதை பிடித்ததால் நடிக்கிறேன்’ என்றார்.

வனிதாவின் சகோதரியின் கணவரான இயக்குனர் ஹரி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாடார் சமூகத்தை சேர்ந்தவரும்கூட! அவரும் ஹரி நாடாரும் உறவினராக இருக்கலாம். அந்த அடிப்படையில் ஹரி நாடாரை தனது உறவினராக வனிதா விஜயகுமார் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.

சாதிப் பிரச்னை வராமல் காதலிப்பது குறித்த கதைதான் இந்தப் படம் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள். ‘பாம்புகூட படம் எடுக்க முடியாத காலகட்டம் இது’ என சினிமா தயாரிப்பில் உள்ள பிரச்னைகளை காமெடியாக கூறுவார்கள். ஆனால் ஹரி நாடார் தொங்க விட்டிருக்கும் நகைகளுக்கு ஒன்றல்ல, 3 படங்கள் எடுக்கலாம் என இணையத்தில் கமெண்ட்கள் வந்து விழுகின்றன.

2கே அழகான காதல் பூஜை மட்டும்தான் இப்போது போட்டு முடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படம் முடிந்து வெளியாகும்போதும் இதேபோல நடமாடும் நகைக்கடையாக ஹரி நாடார் தொடர்ந்தால், சினிமாவில் அவர் நீடிக்கும் வாய்ப்பு உண்டு.

குறிப்பு: அரசியலில் இதர நாடார் சமூகக் கட்சிகளுடன் ஹரி நாடாருக்கு கொஞ்சம் உரசல் உண்டு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேலையில் மும்முரமாக இருக்கிறார் ஹரி நாடார். இது மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதி! தவிர, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் வருகிற தேர்தலில் களம் காண விரும்புகிற தொகுதியும்கூட!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Vanitha Vijayakumar Tamil Movie Sri Reddy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment