தன் திரைப்படத்தை விமர்சித்த நடிகை பார்வதி மீது இணையத்தில் நடக்கும் தாக்குதல்கள் குறித்து, நடிகர் மம்முட்டி நீண்ட நாட்கள் கழித்து வாய் திறந்துள்ளார்.
நடிகர் மம்முட்டி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கஸாபா. இத்திரைப்படம் குறித்து கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் பேசிய நடிகை பார்வதி, “மம்முட்டி நடித்த கஸாபா திரைப்படத்தில், அவர் ஒரு பெண்ணை நோக்கி பேசும் வசனங்கள் கீழ்த்தரமானவை. பெண் வெறுப்புடன் பேசுவதுபோல் உள்ளது. திரையில் வன்முறையும், பெண் வெறுப்பும் கொண்டாடப்படக் கூடாது”, என தன் கருத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, நடிகை பார்வதி மீது ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் தாக்குதல் நிகழ்த்தினர். கடுமையான வார்த்தைகளாலும், பாலியல் ரீதியாகவும் அவரை விமர்சித்தனர்.
அதேநேரத்தில் பார்வதிக்கு ஆதரவாகவும் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். ”நான் எந்த சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை. நாம் அர்த்தமுள்ள விவாதங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். என் சார்பாக பேசுமாறு நான் யாரிடமும் கூறவில்லை. என்னை பாதுகாக்குமாறும் சொல்லவில்லை”, என தெரிவித்தார்.
மேலும், கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் எனவும், இந்த சர்ச்சை எழுந்தபோது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும் மம்முட்டி கூறினார். இதுகுறித்து, பார்வதி தன்னிடம் கூறியபோது பெரிதாக இதுபற்றி கவலைகொள்ள வேண்டாம் எனவும், தன் ரசிகர்கள் யாரையாவது துன்புறுத்துவதை தான் ஊக்குவிக்கவில்லை எனவும் தெரிவித்ததாக, மம்முட்டி கூறினார்.
பார்வதி மீது இணையத்தில் தாக்குதல் அதிகரித்த நிலையில், இதுகுறித்து அவர் எர்ணாகுளம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் பிரிண்டோ என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.