HBD சூர்யா : வெற்றியின் ரகசியம்

இன்று பிறந்த நாள் காணும் சூர்யாவின் ஆரம்பகால திரை உலக வாழ்க்கை எப்படி இருந்தது. அவருடைய வெற்றியின் ரகசியம் பற்றி விரிவாக விவரிக்கிறது.

க.ராஜிவ் காந்தி

‘சினிமாவில் நான் அறிமுகமான சமயம்தான் என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான கால கட்டம். என்னை எந்த நேரத்துலயும் சினிமால இருந்து ரசிகர்கள் தூக்கி எறிஞ்சுடுவாங்கனு ஒவ்வொரு நாளும் பயத்தோட படுத்து, பயத் தோடவே எந்திரிப்பேன். ஏன்னா, எனக்கு நடிப்பு வரலை, வசனங்களை ஞாபகம்வெச்சுக்க மெமரி பவர் இல்லை. டான்ஸ் வரலை. சரியான டோன்ல பேசக்கூடத் தெரியலை. ஆனா, அப்போ என்னோட ஒரே ப்ளஸ், எதையும் சொல்லிக்கொடுத்தாப் புரிஞ்சுப்பேன். அந்த ஒரு திறமையை அடிப்படையா வெச்சுட்டு மத்த எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஆனா, இப்பவும் என் இடம் நிரந்தரம் கிடை யாது. அந்த உண்மையை நானும் உணர்ந்தே இருக்கேன். சுத்தியிருக்கிற போட்டி யைப் பத்தி எனக்குக் கவலையில்லை. நான் பண்ற சரி, தப்புதான் என் கண்ணுக்குத் தெரியும். நான் எப்படி இன்னும் பெட்டராப் பண்ணலாம்னுதான் யோசிப்பேனே தவிர, மத்தவங்களைப் பத்தி நினைச்சுப் பதற்றப்பட மாட்டேன்!” இது சில ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யா கலந்துகொண்ட டிவி கேம் ஷோவில் அவர் சொன்ன வார்த்தைகள்.

சினிமாவுக்கு வந்து ஜெயிக்க நினைப்பவர்கள் ஒவ்வொருவருக்குமான பாடம் அது. அவரது வார்த்தைகள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையும் கூட.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் கிங், எந்த வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் அபூர்வ கலைஞன். குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான ஃபேமிலி எண்டெர்டெய்னர் என்றால் அது சூர்யா மட்டும் தான். சூர்யா சொல்வது போல என்னதான் அப்பாவின் செல்வாக்கு இருந்தாலும் அவரது ஆரம்ப கால கட்டம் மிக மிக போராட்டகளமாகவே இருந்தது.

சூர்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்த சிவகுமாருக்கு ஆர்வமே இல்லை. சூர்யாவுக்கு ம்ஹும்… அவரது கனவு எல்லாமே கார்மெண்ட் பிசினஸ் தான். மணிரத்னமும், வசந்தும் தான் சிவகுமாரிடம் போராடி நேருக்கு நேர் சூர்யாவை சினிமாவுக்கு கூட்டி வந்தனர்.

1997ல் அறிமுகமான சூர்யாவுக்கு நந்தா மூலம் தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்க நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அவர் தொட்டதெல்லாம் பொன் ஆனது. ஆனால் அந்த நந்தாவுக்காக தன்னை தானே எந்த அளவுக்கு மாற்றிக்கொண்டார் என்பது பாலாவை கேட்டால் தான் தெரியும். ஊர்களில் சிலருக்கு சாமி வரும். அந்த சாமியாகவே மாறி பேசுவார்கள். நடந்து கொள்வார்கள். அது போல தமிழ் சினிமாவில் நடிப்பு திலகமாக விளங்கியவர் சிவாஜி கணேசன். அவருக்கு பிறகு அந்த கேரக்டராகவே மாறி விடும் குணாதிசயம் சூர்யாவுக்கு உண்டு.

2003 சூர்யாவுக்கு மறக்க முடியாத ஆண்டு. காக்க காக்க, பிதாமகன், பேரழகன் மூன்று படங்களையும் நினைத்து பாருங்கள். ஒன்றுக்கொன்று வித்தியாசமான எத்தனை முரண்பட்ட கேரக்டர்கள். ஆனால் அவையெல்லாவற்றையும் மிக சிறப்பாக செய்து காட்டியவர் சூர்யா. அதற்கு பிறகு கஜினி, வேல், அயன், சிங்கம், 7ஆம் அறிவு, சிங்கம்2 என அவரது வெற்றி பயணம் தொடர்கிறது. சூர்யாவை பொறுத்தவரை தன்னை ஒரு சிறந்த நடிகனாக மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவுக்கான கமர்ஷியல் ஹீரோவாகவும் நிரூபித்துவிட்டார்.

உடலை குறைக்கிறார், ஏற்றுகிறார் என்பதை நாம் எளிதாக சொல்லிவிடுகிறோம். ஆனால் அதை செயல்படுத்தி பார்க்கும்போது தான் தெரியும். அதன் வலிகளும், நரக அவஸ்தைகளும்.

சூர்யா என்னும் விதையை மரமாக விடாமல் தடுக்க வென்னீர் ஊற்றியவர்கள் வெகு பலர். ஆனால் அந்த வென்னீரையெல்லாம் தன் வளர்ச்சிக்கான ஊற்றாகவே பயன்படுத்திக்கொண்டு வளர்ந்திருக்கிறார் சூர்யா. அப்பாவின் வளர்ப்பு அவரை ஊருக்கே உதவி செய்யும் நல்ல மனிதனாக மாற்றியது. ஒரு நடிகனாக தன்னை தானே வடிவமைத்துக்கொண்டது அவரது உழைப்பும் விடாமுயற்சியும் தான்.

சுண்டி இழுக்கும் முகம், அழகான சிரிப்பு, தன் சொல்படி எப்போதும் ஏறி இறங்கும் கட்டுமஸ்தான உடல், பல மொழிகளை பார்வையிலேயே உணர்த்தும் திறன், என்றும் அதே இளமை துடிப்பு என ஒரு அசல் ஹீரோவுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் தன்னகத்தே கொண்டு வந்திருக்கிறார் சூர்யா. நடிகனாக இருப்பவன் நல்லவனாக இருக்க முடியாது என்ற வார்த்தைகளை பொய்யாக்கி எதிரிகளை கூட தன் வசம் ஈர்த்து வைத்திருக்கிறார் சூர்யா.

சூர்யாவை செதுக்கியது பாலாவும், கவுதம் மேனனும் தான் என்றாலும் அந்த செதுக்கலுக்கு தன்னையே கொடுத்து இந்த வளர்ச்சியை சாத்தியமாக்கியிருக்கிறார் சூர்யா. தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெர்ஃபார்மராகவும், எண்டெர்டெய்னராகவும் தன்னை நிரூபித்து, ரிவ்யூ, ரெவன்யூ இரண்டிலுமே தான் கிங் என நிரூபித்து விட்டார்.

×Close
×Close