தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் இன்று தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
ரசிக ரசிகைகள் தங்களது சொந்த அண்ணனாக விஜய்யை கருதும் அளவுக்கு, அவர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்துள்ளார் விஜய். அவரைப் பற்றிய சிறு செய்தியையும் பெரிதாக தூக்கிக் கொண்டாடுவார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் விஜய். மலையாள முன்னணி நடிகர்களைப் போன்று இவரின் படங்களுக்கும் அங்கு ஓபனிங் கிடைப்பதே இதற்கு பெரும் சான்று.
அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘பிகில்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் நேற்று வெளியாகின. இதனை டிரெண்ட் செய்வதற்காக அத்தனை விஜய் ரசிகர்களும் ட்விட்டரில் குழுமியிருந்தனர். நேரமாக ஆக, எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே சென்றிருந்தார்கள்.
இந்நிலையில் தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் குறித்த ஒரு ட்விட்டர் பதிவில், “திருவள்ளுவர் ஒரு எழுத்தாளர் அவ்ளோவ் தான், ஆனால் என் தளபதி பாடகர், நடிகர், ஆடுபவர் அதையும் தாண்டி சிறந்த மனிதர் புரியுதா?” என கமெண்ட் செய்திருந்தார் இளைய தளபதி ரசிகன் எனும் ஐ.டி-யிலிருந்த ரசிகர்!
இதைப் பார்த்ததும் ‘என்னது திருவள்ளுவர் எழுத்தாளரா’ என வேறொரு நபர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். ‘இவங்க அலப்பறைக்கு அளவே இல்லப்பா’ என்ற ரீதியில் பலரும் இதனைக் குறிப்பிட்டு வந்தனர்.