வடிவேலுக்கு இன்று (அக்டோபர் 10) பிறந்தநாள்! வயது 57-ஐ எட்டினாலும், இன்றும் டி.வி. காமெடி காட்சிகளில் குட்டீஸின் ஃபேவரிட் தோஸ்த் வைகைப் புயல்தான்! ஹேப்பி பர்த் டே, அண்ணே!
வடிவேலுவின் வசனங்கள் மட்டுமின்றி, அவருடைய உடல்மொழி தான் வெகுஜன மக்களிடையே அவரைக் கொண்டு சேர்த்தது. தற்போதுள்ள காமெடியன்களுக்கு அந்த உடல்மொழி கைவரப் பெறாதது மிகப்பெரிய குறை.
வடிவேலு என்று சொன்னாலே வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் எத்தனையோ காமெடிகள் நினைவுக்கு வரும். கவுண்டமணி - செந்தில் காமெடிக் கூட்டணி கோலோச்சிக் கொண்டிருந்த 80-களில், கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வந்தவர் வடிவேலு. கவுண்டமணி - செந்தில் காமெடிக் கூட்டணியில் ஓரமாகப் பங்கேற்ற வடிவேலு, நாளடைவில் தனி காமெடியனாகி, வியக்க வைக்கும் வகையில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்தார்.
டி.ராஜேந்தர் இயக்கிய ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் தான் வடிவேலு அறிமுகமானார். அதன்பின், கஸ்தூரி ராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடித்தார். இருந்தாலும், ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான ‘காதலன்’ படம்தான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தந்தது. அதன்பிறகு பல படங்களில் தன் தனித்துவ காமெடியால் முத்திரை பதித்தார்.
ஒல்லி தேகமும், கறுப்பு நிறமும்தான் வைகைப்புயலைப் பார்க்கும்போது கிடைக்கும் அடையாளங்கள். ஆனால், வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், நாம் வாயை மூடாமல் சிரித்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு நகைச்சுவை வந்துகொண்டே இருக்கும். எதையும் இட்டுக்கட்டி சொல்லாமல், எல்லாமே நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சாதாரண விஷயங்களைக் காமெடி ஆக்கியதில்தான் வடிவேலுவின் வெற்றி அடங்கியிருக்கிறது.
‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘தவசி’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’ என வடிவேலுவின் அல்ட்ரா காமெடிப் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் வடிவேலு, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் ஹீரோவாக நடித்தார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’, ‘எலி’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அவை தோல்வியைத் தழுவியதால், மறுபடியும் காமெடியனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
வடிவேலு - கோவை சரளா காம்போ, தமிழ் சினிமாவில் இனிமேல் அமையுமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு கணவன் - மனைவியாக பல படங்களில் வெளுத்து வாங்கியிருக்கின்றனர். அதுவும், கோவை சரளாவிடம் வடிவேலு அடிவாங்கும் காமெடிகள், ஒவ்வொரு வீட்டையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
வடிவேலுவின் வசனங்கள், எக்காலத்திற்கும், எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்துபவையாக இருக்கும் என்பது சிறப்பு. நாம் சாதாரணமாகக் கிண்டல் செய்யும்போது பயன்படுத்தும் வசனங்களில் பெரும்பாலானவை, படங்களில் வடிவேலு பேசியதாகத்தான் இருக்கும். ‘நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்’, ‘எது பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணணும்’, ‘த்ரிஷா இல்லேன்னா திவ்யா’, ‘அய்யோ பாவம்... அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு’, ‘தம்பி, டீ இன்னும் வரல’, ‘இது வாலிப வயசு’, ‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’, ‘பாபு... ஸ்னேக் பாபு...’, 'போங்க தம்பி... போயி, புள்ள குட்டிகள படிக்க வைங்க’ என நம்முடைய அன்றாட வாழ்வில் பேசும் வசனங்களில் பெரும்பாலானவை என்பது நமக்குக் கிடைத்த பெருமை.
நடிப்பில் மட்டுமல்ல, பல பாடல்களையும் பாடியிருக்கிறார் வடிவேலு. ‘போடா போடா புண்ணாக்கு’, ‘எட்டணா இருந்தா’, ‘வாடி பொட்டப்புள்ள வெளிய’, ‘நாலடி ஆறு அங்குலம்’ என அவர் குரலில் குதித்த பாடல்கள் எல்லாமே இன்றும் ரசிக்கத்தக்கவை.
நம்மையெல்லாம் சிரிக்க வைத்த வடிவேலுக்கு, சில கறுப்புப் பக்கங்களும் உண்டு. 2008ஆம் ஆண்டு அவருக்கும், விஜயகாந்துக்கும் பிரச்னை வந்தது. 2010ஆம் ஆண்டு வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்த சிங்கமுத்துவுக்கும், அவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. விஜயகாந்துடன் பிரச்னை இருந்ததால், 2011ஆம் ஆண்டு அதிமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றபோது, அவரை எதிர்த்து திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தார். ஆனால், அந்தத் தேர்தலில் திமுக தோல்வி அடைய, வடிவேலு ஓரம் கட்டப்பட்டார். அத்துடன், ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றும் அவர் பிடிவாதம் பிடிக்க, தமிழ் சினிமாவில் இருந்தே விலக்கி வைக்கப்பட்டார்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு ‘சிவலிங்கா’ படத்தில் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது, விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பல வருடங்கள் கழித்து கோவை சரளாவுடன் அவர் நடித்திருக்கிறார். அடுத்து, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ தயாராகிக் கொண்டிருக்கிறது. எனவே, பழைய வடிவேலுவைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். காலம் கடந்து, இன்றைக்கும் சிரிக்க வைக்கும் அவருடைய காமெடிகள்தான், நெருக்கடி மிகுந்த வாழ்க்கைச் சூழலில் இருந்து நம்மை மீட்டெடுக்கின்றன என்றால் அது மிகையல்ல.