செங்கோட்டையன்
இளைய தளபதி என்று தமிழ் சினிமாவிலும், ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர் விஜய். இன்று அவரின் 45வது பிறந்த நாள். அவரை பற்றிய சிறப்பு கட்டுரைக்கு போகும் முன்பு ஒரு சிறிய முன்னுரை.
முன்னுரை
சந்திரமுகி பட வெற்றி விழாவில் “சோதனை வரும், சாதனை எப்ப வரும், நீ சோதனையை சந்திச்சா தான்யா சாதனை ஆகும்” என்று ரஜினி பேசினார். அதே மேடையில் அடுத்த தலைமுறையை சேர்ந்த இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயும் இருந்தார். அவருக்கும் அந்த வார்த்தைகள் மிகவும் பொருந்தும். அதை விஜய் உணர்ந்தாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் நிச்சயம் உணர்ந்தே இருப்பார்கள்.
எம்ஜிஆர் 20 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு தான் ஹீரோவாகவே ஆனார். வளர்ந்து வந்த காலத்தில் கால் உடைந்தது. துப்பாக்கியால் சுடப்பட்டார். முதல்வரான பிறகு உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் இருந்தார். ஆனால் மீண்டும் மீண்டும் மீண்டு வந்தார்.
ரஜினி நடிக்க வந்த புதிதில் கருப்பா இருக்கான். ஹீரோவா நடிக்க வைக்கவே முடியாது என்றார்கள். உடல்நிலை சரியில்லாமல் போக மனநிலை சரியில்லை. ரஜினி கதை அவ்ளோ தான் என்றார்கள். முக்கிய கட்டங்களில் எல்லாம் அவரை கன்னடர் என்று சொல்லி சிலர் ஒதுக்கினார்கள். ஒரு சில கட்சிகள் குறி வைத்து தாக்கின. உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூர் போய் ரசிகர்கள் அன்பால் மீண்டும் திரும்பி வந்து காலா, 2.0, சன் பிக்சர்ஸ் பிரமாண்ட படம் என நடித்து வருகிறார்.
அதே மாதிரி தான், ஒருவரை நடிக்க வந்த புதிதில் இதெல்லாம் ஒரு மூஞ்சியா? பிட்டு படமா நடிக்கிறான் என்றார்கள். வளர்ந்து வந்த சமயத்தில் ஆளும் கட்சிகளால் அலைகழிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் தொடர் தோல்வி. இவர் க்ளோஸ் என்றார்கள். ஆனால் மீண்டும் மீண்டு இன்று தளபதி என்ற அடைமொழியோடு 45வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாள் ஸ்பெஷலாக திரையரங்குகளில் அவரது படம் போடுவதும், அவரது அடுத்த படத்தின் தலைப்பு வெளியிடுவதும் என ரசிகர்களுக்கு இன்று செம்ம விருந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு பிரபலத்தின் மகனாக இருந்து ஹீரோவானவர், என்ன பெரிய சாதனையா என போகிற போக்கில் கேட்பவர்களுக்கு பிரபலங்களின் வாரிசாக இருந்தால் சினிமாவில் நுழைவது ஈஸியாக இருக்கலாம். ஆனால் நிலைப்பது கஷ்டம். உச்சத்தை தொடுவது குதிரைக்கொம்பு. உச்சத்தில் நிலைப்பது இமாலய சாதனை என்பதை நிரூபித்திருக்கிறார் விஜய்.
விஜய்யின் இயல்பு
பாலிவுட், கோலிவுட்டில் உள்ள மற்ற நடிகர்கள் போல ஜிம்முக்கு போய், கட்டுமஸ்தான உடலை காட்டி ரசிகர்களை இழுக்க வேண்டிய அவசியமே அவருக்கு இல்லை. சாதாரண உணவு பழக்கத்தை கடைபிடித்து எப்போதும் ஒரே மாதிரி இருப்பது அவரது ஸ்பெஷல். “நம்மை சுத்தி இருக்கவங்ககிட்ட அன்பு செலுத்தினாலே இளமையாக இருக்க முடியும்” என்பது அவர் அடிக்கடி கூறும் வாசகம். பேச்சுக்கு ஏற்ற மாதிரியே தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர், அன்பு செலுத்துபவர். முன்பெல்லாம் ரசிகர்களிடம் அவ்வளவாக அன்யோன்யமாக நடந்து கொள்ள மாட்டார் என்ற பேச்சு இருந்தது. சமீப காலங்களில் போகும் இடங்களில் யாராவது தன்னை பார்க்க வந்தால் அவர்களை தோளோடு அணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்பவர். சமீபத்தில் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பிலும் சக பணியாளர்களுக்கு ஒரு முறையாவது விருந்து வைக்கும் பழக்கத்தை நடைமுறையில் வைத்துள்ளார். படப்பிடிப்பில் யாருடனும் பேச மாட்டார் என்று சொல்வார்கள். அது நடிப்பை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பதால் அமைதியாக இருப்பாராம். பேக்கப் சொல்லி விட்டால் போதும், உடன் நடிக்கும் நடிகர்கள், துணை நடிகர்களோடு மிகவும் சகஜமாக ஜாலியாக இருப்பார்.
விஜய் சினிமா
விஜய்க்கு இது தெரியாது என்று சொல்லி விட்டால் அதை எப்படியாவது சாதித்து காட்டி விட வேண்டும் என்ற முனைப்பு விஜய்க்கு உண்டு. ஆரம்பத்திலேயே நடனம், சண்டை கற்றுக் கொண்டு நடிக்க வந்தவர். இன்று வரை மாஸ் ஹீரோக்களில் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர் என்ற பெயர் விஜய்க்கு மட்டுமே உண்டு. பூவே உனக்காக, குஷி, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் என அவ்வப்போது வசூல் சாதனை நிகழ்த்தும் விஜய், நடிப்பிலும் தன்னால் முடிந்ததை செய்து கொண்டே தான் வந்திருக்கிறார். ஆக்ஷன் ஹீரோவாக இருந்த சமயத்தில் காவலன் என்ற காதல் படத்திலும், நண்பன் என்ற மாணவன் கதாபாத்திரத்திலும் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். துப்பாக்கி படத்தில் அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஸ்டைலிஷாக நடித்தார். தெறி, மெர்சல் படங்களில் இன்னும் இளமையானவராக காட்சி தந்தார். சமீப காலங்களில் விஜயின் முந்தைய நடனம் வெளிப்படவில்லை என்று பலரும் சொல்லி வரும் வேளையில் அடுத்த படத்தில் அதை செய்வார் என்று நம்பலாம்.
சம்பளம் மற்றும் வியாபாரம்
இந்த தலைப்பு தேவையா இல்லையா என்ற விவாதம் வரலாம். ஆனால் கட்டாயம் பேசியே ஆக வேண்டி இருக்கிறது. தற்போது ரசிகர்கள் சண்டை போடும் ஒரு முக்கியமான புள்ளி வசூல் தான். தமிழ் சினிமாவில் தற்போது ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ விஜய் தான். படத்தின் வசூல் நிலவரத்தை பொறுத்தே சம்பளத்தை நிர்ணயித்து கொள்கிறார். துப்பாக்கி பட நேரத்தில் 15 கோடியும், கத்தி நடித்த போது 20 கோடியும், தெறி சமயத்தில் 25 கோடியும், மெர்சல் படத்திற்கு 30 கோடியும், தற்போது சன் பிக்சர்ஸ் படத்துக்கு 35 கோடியும் சம்பளமாம். வியாபாரத்தை பார்க்கும்போது துப்பாக்கி படத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்த விஜய் 5 படங்களில் 100 கோடி வசூலை செய்திருக்கிறார். ரஜினி வசூல் சக்கரவர்த்தி என்றால் இவர் தான் வசூல் மன்னன். ஓவர்சீஸ் மார்க்கெட்டிலும் விஜய் படங்கள் நல்ல வசூலை தருகின்றன. முக்கியமாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, யுகே, ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விஜய் படங்களுக்கு நல்ல மார்க்கெட். குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் விஜய் படத்தை விரும்பி பார்ப்பதால் சுமாரான படமாக இருந்தாலும் பெரிய நஷ்டத்தை கொடுப்பதில்லை.
பிடித்த விஷயங்கள்
விஜய்க்கு கார்கள் மிகவும் பிடித்தமானவை. கார் பிரியர் என்றே சொல்லலாம். அவ்வப்போது வரும் புது கார்கள் வாங்கி வைத்து விடுவார். அவருக்கு மிகவும் பிடித்தது அவரிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ். அதிகம் உபயோகிப்பது பிஎம்டபிள்யூ மற்றும் ஸ்விஃப்ட் கார்கள். அதுவும் காரில் பயணம் செய்யும்போது இளையராஜா பாடலை தவறாமல் தினமும் கேட்பார். செல்ஃப் டிரைவிங் அவருக்கு பிடித்தமான ஒன்று. அவரே காரை ஓட்டிக் கொண்டு குடும்பத்தோடு அவ்வப்போது சிட்டியை ரவுண்ட் அடிப்பார். பிரியாணி விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு, அதையே தனக்கு பிடித்தவர்களுக்கும் செய்து கொடுத்து உபசரிப்பார். தோசை மிகவும் பிடிக்கும், அவரே தோசை சுட்டு சாப்பிடுவதும் அவருக்கு பிடித்த ஒரு விஷயம்.
அடுத்த கட்டம்
தமிழ் சினிமாவில் ரசிகர் மன்றங்களை அமைப்பு ரீதியாக பலமாக வைத்திருக்கும் முக்கியமான நடிகர் விஜய்தான். அவ்வப்போது ரசிகர்களை தன் பனையூர் அலுவலகத்துக்கு அழைத்து விருந்து வைத்து, புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு முக்கியமான விஷயங்களையும் பேசுவாராம். சென்னையில் இருந்தால் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைய ரசிகர்களை சந்திக்க ஒதுக்குகிறார். சந்திக்க முடியாத லட்சக்கணக்கான ரசிகர்களிடம் பேசுவதற்கு அவ்வப்போது கிடைக்கும் மேடைகளை பயன்படுத்திக் கொள்கிறார். அதில் அவர் சொல்லும் குட்டிக்கதைகள் விஜய் ரசிகர்களுக்கு டானிக். தன் பிறந்த நாள் விழாக்களில் ரசிகர்களிடம் ஆடம்பரங்களை தவிர்க்க சொல்வதோடு, இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்ய சொல்லுவார். அதன்படி நலத்திட்ட பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறார்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர். அமைதியா நம்ம வேலையை செய்வோம், நேரம் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்பது தான் ரசிகர்களிடம் விஜய் சொல்லும் ஒரே வாக்கு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.