பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அந்த அலுவலகத்தின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் பெரும் அளவிற்கு வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு தமிழ் மொழியிலும் அறிமுகமானது. பிக் பாஸ் 1 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பிரபலமானது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஜூன் 17 -ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை 2வது முறையாக கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
கடந்த ஆண்டே இந்த நிகழ்ச்சியை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் விஜய் டிவி அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்தனர். இதன்பேரில், சுமார் 50-க்கும் அதிகமான போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக இந்து மக்கள் கட்சியினர், பிக் பாஸ் நிகழ்சியில் நடக்கும் நிகழ்வுகளை பதாகைகளாக கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் குமார், பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவருடைய சுய விளம்பரத்திற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதனால் அவருக்கும், தொலைக்காட்சிக்கும் மட்டுமே லாபம். இந்த நிகழ்ச்சி குழந்தைகளை தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும். சினிமா துறையில் சென்சார் போர்டு உள்ளது போல் தொலைக்காட்சிக்கும் சென்சாரைக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.