கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவர்கள்’ வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அடுத்து’ மாநிலம் முழுவதும் மோதல்கள் வெடித்தன. தடையை எதிர்த்த 7 மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதிருந்து, மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஹிஜாப்-க்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையில், உடுப்பியில் உள்ள அரசு முன் பல்கலைக்கழக கல்லூரியில் படிக்கும் 5 மாணவிகள், கல்லூரியில் ஹிஜாப் அணிவது உட்பட அத்தியாவசியமான மதப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தங்களுக்கு அடிப்படை உரிமை வழங்கக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மாணவர்கள் அமைதியை பேண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து “அமைதி மற்றும் நல்லிணக்கத்தை” நிலைநாட்டுவதற்காக மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ஹிஜாப் விவகாரம் குறித்து, தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர். பக்கத்து மாநிலத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்துக்கும் வந்துவிடக்கூடாது என பலரும் அச்சம் தெரிவித்தனர்.
அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசியிருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் ஒரு முஸ்லீம் நாட்டுல 22 வருடங்கள் இருந்திருக்கேன். அதனால சொல்றேன் ஹிஜாப்-க்குள்ள இருந்து பழகினவங்களுக்கு அது ரொம்ப பாதுகாப்பான உணர்வு. அதை நீக்க சொல்றது அவங்களுக்கு ரொம்ப காயம் தரக்குடிய விஷயம், இது ஒரு மனிதநேயமற்ற செயல். இதற்காக சின்ன பசங்களை தூண்டிவிட்டு போராட்டம் பண்றது ரொம்ப தப்பான விஷயம்.
யாரா இருந்தாலும், எந்த வழியில் வாழ்ந்தாலும், அவங்களோட வாழ்க்கைய அவங்க விருப்பப்படி’ மரியாதையோட கடைபிடிக்கிறதுக்கு’ எல்லாருக்கும் உரிமை இருக்கு.
இந்த மாதிரி ஒரு பாதுகாப்பற்ற உணர்வு முஸ்லீம் பெண்களுக்கு கொடுக்கிறது ரொம்ப தவறானது. தமிழக முதல்வரும், பிரதமரும் தயவு செய்து இதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்கணும் தாழ்மையோட கேட்டுக்கிறேன்.
இனியும் இது தொடர்ந்தா நாங்க அத்தனை பேரும்’ ஹிஜாப் போட்டு வெளில வர வேண்டியிருக்கும் என லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவரது பேச்சை பல்வேறு தரப்பினரும் ஆதரித்து, அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“