மகாராஜா படத்தை பார்த்து வியந்த பிரபல மெக்சிகன் நடிகர், அலெஜான்ட்ரோ, நடிகர் அனுராக் காஷ்யப்பை தனது படத்தில் நடிக்க அழைத்துள்ளதாக, மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. நாயகி இல்லாத இந்த படத்தில் விஜய் சேதபதியுடன், நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த ஜூன் 14-ந் தேதி இந்த படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மகாராஜா விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றிருந்தது.
மேலும், 2024-ம் ஆண்டு வெளியான படங்களில், மகாராஜா படம் பெரிய ஓப்பனிங் பெற்ற 3-வது படமாக மாறியது. ஒடிடி தளத்தில் வெளியான பின்னரும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த மகாராஜா திரைப்படம் ரூ100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மேலும், நெட்ஃபிளக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான மகாராஜா 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில், அமீர்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே சமீபத்தில் மகாராஜா திரைப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த நவம்பர் 29-ந் தேதி வெளியானது. தமிழகத்தை போலவே சீனாவிலும் மகாராஜா படத்திற்கு அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்திற்கு பிறகு சீனாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற அந்தஸதை பெற்ற, மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதேபோல், இந்தி சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முக திறமையுடன் வலம் வரும் அனுராஜ்க காஷ்யப், இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அதன்பிறகு, லியோ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்த இவர், மகாராஜா படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். விஜய் சேதுபதியை போலவே மகாராஜா படத்திற்காக, அனுராக் காஷ்யப் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
தற்போது மகாராஜா படத்தை பார்த்த பிரபல மெக்சிகன் இயக்குனர் அலெஜான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டு அனுராக் காஷ்யப் நடிப்பை பார்த்து வியந்த அவர், தனது படத்தில் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் புகழ்பெற்ற இயக்குனராக இருக்கும், அலெஜான்ட்ரோ 4 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார்.
லியோடனா டிகாப்ரியோ நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற தி ரேவண்ட் படத்தின் இயக்குனர் அலெஜான்ட்ரோ தான். ஒரு தமிழ் படத்தை பார்த்து, அந்த படத்தில் நடித்த நடிகரை தனது படத்தில் நடிக்க, பிரபல ஹாலிவுட் இயக்குனர் அழைத்திருப்பது தமிழ் சினிமா மற்றும் தமிழ் இயக்குனருக்கு கிடைத்த பெருமை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“