How Raju won Bigg Boss 5 Tamil Title Tamil news : 100 நாள்கள் போராட்டத்தின் நிறைவாக மக்கள் மனதைக் கவர்ந்த ராஜு வெற்றியாளராக வாகை சூடினார். இரண்டாவது இடத்தை பிரியங்கா கைப்பற்றினார். இது ஏற்கெனவே தெரிந்த முடிவு என்றாலும் மேடையில் கமல் ஹாசன் வெற்றியாளரை அறிவித்த தருணம், உண்மையில் நெகிழ்ச்சியாக இருந்தது. எந்தவித ஏமாற்றமோ பொறாமையோ இன்றி ராஜுவின் வெற்றியை தன்னுடைய வெற்றியாகக் கொண்டாடிய பிரியங்கா, மீண்டும் மீண்டும் மக்கள் மனதை வென்றுகொண்டே இருக்கிறார். எந்தவித சர்ச்சைகளோ, சண்டைகளோ பேசும்படியான பெரிய விஷயங்களோ எதுவும் இல்லாமல் எப்படி ராஜு இந்த சீஸனின் வெற்றியாளர் ஆனார்? அலாசுவோமா...
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே, ராஜு தன் நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார். எந்த இடத்திலும் அனாவசியமாகவோ அவசியமாகவோ கோபப்படக்கூடாது என்ற முடிவில் வலுவாக இருந்தார். இதனை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார் ராஜு. எதையும் வெளிப்படையாகப் பேசுவது ராஜுவின் இயல்பாகவே இருந்தது.
அண்ணாச்சி, சிபி, அக்ஷரா, தாமரை, சஞ்சீவ், பிரியங்கா உட்படப் பல போட்டியாளர்களுடனும் அழகிய உறவை இறுதிவரை தக்கவைத்துக்கொண்டார் ராஜு. ஆரம்பத்தில் இருந்தே பாவனியின் சில செயல்களால் அதிருப்தி அடைந்த ராஜு, அவரோடு டிஸ்டன்ஸ் கடைபிடித்து வந்தார். அதனை சரிசெய்ய பாவனி பலமுறை முயற்சி செய்தபோதிலும், ராஜு தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. இந்நிலையில் போலியாக பாவனியுடன் எந்த நிலையிலும் ராஜு பழகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்காகவும் எதற்காகவும் போலியாக பேசாமல் இருந்தது மக்களை அதிகம் கவர்ந்தது.
ஒருகட்டத்தில் பாவனி மற்றும் ராஜு இடையேயான கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வந்த பிறகு, யார் என்ன என்றும் பாராமல் மன்னிப்பு கேட்ட விதமும் அனைவர்க்கும் பிடித்தது. மேலும், வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினையின்போதும் ராஜுவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுதான் வீட்டில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பாக மட்டுமல்ல, மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. யாருடைய பிரச்சனையிலும் தேவையில்லாமல் என்றைக்குமே ராஜு ஆஜராகவில்லை.
மக்கள் மனதை மட்டுமல்ல, போட்டியாளர்களையும் அதிகம் ஈர்த்ததற்குக் காரணம் ராஜுவின் நகைச்சுவை உணர்வு. மேலும், வீட்டிற்குள் இருந்துகொண்டு பலரையும் என்டெர்டெயின் செய்த விதம் வேற லெவல். இவ்வளவு பாசிட்டிவிட்டி இருந்தும், ராஜு மீதான நெகட்டிவ் விஷயம் என சொல்லவேண்டும் என்றால், பெரிதாக எதுவுமில்லை. அபிநயிடம் அவர் பாவனியை காதலிக்கிறாரா என்று ஓர் டாஸ்க்கின் போது கேட்டதுதான் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டின் விதியின்படி எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்றாலும், அபிநய் திருமணமானவர் என்று தெரிந்தபோதிலும் எல்லோர் முன்பும் அப்படிக் கேட்டிருக்க வேண்டாம் என்பதுதான் பலரின் கருத்தாக இருந்தது. இதற்காக அவர் எல்லோரிடமும் சம்பந்தப்பட்டவர்களிடமும் மன்னிப்பும் கேட்டார்.
என்டெர்டெயின் முதல் வீட்டின் அமைதியை எந்த வகையிலும் கெடுக்காமல் இருந்தது வரை பல்வேறு காரணங்களால் ராஜு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதுவே ராஜு இந்த வெற்றிவாகை சூடுவதற்குக் காரணமாக இருந்தது. இவருக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் போட்டியிட்டார் பிரியங்கா. அன்பிற்கும், சாப்பாட்டிற்கும், நட்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதேநேரத்தில் மற்றவர்களுக்காக முக்கியமாகத் தாமரைக்காக ஏராளமான இடங்களில் குரல் கொடுத்து, மக்களுக்கு பிடித்தமான தொகுப்பாளினி என்பதையும் தாண்டி மக்களின் ஃபேவரைட் பிரபலமாக மாறினார். என்னதான் ஆனாலும், சாப்பிடுவதை நிறுத்தவே கூடாது என்கிற பெரிய தத்துவத்தை உணர்த்தியுள்ளார் பிரியங்கா.
மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு முதல் வெற்றியாளரின் தேர்வு வரை அனைத்திலும் வித்தியாசமும், சுவாரசியமும் நிறைந்ததாகவே இருந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil