தயாரிப்பாளர்களின் பாக்கெட்டை பதம் பார்ப்பது எப்படி?

தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்களின் உதவியாளர்களுக்கு பெப்சி வரையறை செய்திருக்கும் சம்பளத்தை மட்டுமே இனி தருவோம் என முடிவு செய்துள்ளது.

பாபு

நண்பரான அந்த இளம் இயக்குனர் தனது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மூத்த நடிகர் ஒருவரை அணுகினார். நடிகர் தமிழ் சினிமாவில் புதிய பாதை அமைத்த இயக்குனர்களில் ஒருவர் கம் நடிகர். படத்தில் நடிக்க ஒரு கோடி கேட்டார். நண்பர் அதனை எழுபத்தைந்து லட்சமாக்க முயன்றார். எழுபத்தைந்தில் முடித்தால் மட்டுமே நடிகரின் செலவை ஒரு கோடிக்குள் நிறுத்த முடியும். நண்பர் சொன்ன கணக்கு விழி பிதுங்க வைத்தது.

மூத்த நடிகர் தன்னுடன் மூன்று உதவியாளர்களை அழைத்து வருவார். குடைபிடிக்க ஒருவர், டச்சப் செய்ய இன்னொருவர், சிகையலங்காரத்துக்கு மூன்றாவது நபர். இந்த வேலைகளைச் செய்ய தயாரிப்பாளரிடம் ஆள்கள் உண்டு. ஆனால், இந்த வேலைகளை செய்ய நடிகர் தனது உதவியாளர்களை மட்டுமே அனுமதிப்பார். அந்த மூன்று பேருக்கும் தயாரிப்பாளர் சம்பளம் தர வேண்டும். குடைபிடிப்பவருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் ஒன்பதாயிரம் ரூபாய். எழுத்துப்பிழையில்லை, ஒரு நாளைக்கு ஒன்பதாயிரம் ரூபாய்கள். இப்படி மூன்று பேருக்குமாக தினம் முப்பதாயிரம் தயாரிப்பாளர் தர வேண்டும். இது தவிர காலை டிபன், மதிய சாப்பாடு, மாலை டிபன், இரவு படப்பிடிப்பு நீண்டால் டபுள் பேட்டா.

நடிகருக்கு குடைபிடிக்கும் வேலைக்கு போகலாமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. நடிகர் குடைபிடிப்பவர் பெயரைச் சொல்லி தயாரிப்பாளரிடம் வாங்குவது ஒன்பதாயிரம் ரூபாய். ஆனால், குடைபிடிப்பவருக்கு மாதச்சம்பளம்தான். மாதத்துக்கு பதினைந்தாயிரம் கிடைத்தால் அதிகம். எனில் மீதி பணம்? அது நடிகருக்கு. நடிகரின் உதவியாளர்கள், அது குடைபிடிப்பவராக இருந்தாலும் நடிகருக்கு சம்பாதித்து தர வேண்டும். இதைப் படிக்கையில் குடைபிடிப்பவருக்கு நடிகர் சம்பளம் தருகிறாரா இல்லை குடைபிடிப்பவர் மூலம் நடிகர் சம்பாதிக்கிறாரா என்ற ஐயம் வரும். எதுவாக இருப்பினும் தயாரிப்பாளருக்கு தினம் முப்பதாயிரம் பணால்.

மேலே உள்ளது உள்ளூர் படப்பிடிப்புகளில். வெளியூர் என்றால் மூன்று பேருக்கும் பயணச்செலவு, தனித்தனி ஏசி தங்கும் அறை, காலை, மதிய, மாலை உணவுடன் இரவு உணவு என செலவு இரட்டிப்பாகும். ஐம்பது நாள் படப்பிடிப்பு முடிகையில் 25 லட்சங்கள் தயாரிப்பாளருக்கு கூடுதலாக பழுத்துவிடும். இது ஒரு நடிகரின் கதை. ஒரு படத்தில் இதேபோல் பத்து பதினைந்து நடிகர், நடிகைகள் இருப்பார்கள்.

இதை நண்பர் சொல்லிக் கொண்டிருக்கையில், விளம்பரங்கள் எடுக்கும் நண்பர் இடைபுகுந்தார். ஏழு வருடங்களுக்கு முன்பு நமிதாவின் உதவியாளர்களுக்கு ஒருநாள் சம்பளமாக இருபத்தேழாயிரம் ரூபாய் அளித்ததைச் சொன்னார். மூத்த மற்றும் இரண்டாம் கட்ட நடிகையின் உதவியாளர்கள் சம்பளமே இப்படியெனில் முன்னணி நட்சத்திரங்களின் உதவியாளர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் எத்தகையாதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். தயாரிப்பாளர்கள் மேல் கருணைவரும்.

தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்களின் உதவியாளர்களுக்கு பெப்சி வரையறை செய்திருக்கும் சம்பளத்தை மட்டுமே இனி தருவோம் என முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர், எங்கள் உதவியாளர்களுக்கு நாங்களே சம்பளம் தருகிறேnம் என்று அறிவித்திருக்கிறார்கள். மற்றவர்கள்? வாங்கிப் பழக்கப்பட்டவர்கள். மனசு மாற நாளாகும்.

தயாரிப்பாளர்கள் இப்படியொரு முடிவு எடுக்க காரணமாக இருந்தவர் நயன்தாரா. நயன்தாராவை வைத்து படப்பிடிப்பு நடத்தினால், அவரது உதவியாளர்களுக்கு என்று ஒரு லட்சத்தை எடுத்து ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு லட்சம். உள்ளூர் திறமைசாலிகளிடம் நயன்தாரா தனது முகத்தை, சிகையை காட்டுவதில்லை. அவரது சிகையலங்கார, முக அலங்கார கலைஞர்கள் மும்பையிலிருந்து வருவார்கள். அவர்களுக்கு பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட், நட்சத்திர விடுதியில் தனித்தனி அறைகள், நாளொன்றுக்கு இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். இத்யாதி. அறம் படத்தில் மதிவதினியின் எளிமையான தோற்றம், நடவடிக்கைக் கண்டு நயன்தாராவை தோழராக்கினார்கள். தோழர் நயன்தாரா ஒரு காஸ்ட்லி தோழர் என்பது அவர்களுக்கு தெரியாது.

நட்சத்திரங்கள் மட்டுமில்லை. தயாரிப்பாளர்களின் பாக்கெட்டை பதம்பார்ப்பவர்கள் அனைத்துத் தரப்பிலும் இருக்கிறார்கள். இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், சண்டைக்கலைஞர்கள்…

சமீபத்தில் நண்பர் பள்ளிக்கூட விளம்பரம் எடுக்க பிரபல நடிகையை அணுகினார். நடிகையின் குழந்தை பிரபலமான குழந்தை நட்சத்திரம். இந்தப் பள்ளி எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று நான்குவரி டயலாக் பேச வேண்டும். அதிகபட்சம் அரைநாள் கால்ஷீட். சம்பளமாக இரண்டு லட்சம் பேசப்பட்டது. ஆனால் செலவு? குழந்தையை படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு அழைத்துப்போக இன்னோவா கார்தான் வேண்டும் என்றார்கள். கேரவன் அவசியம், அதுவும் சிங்கிள் டோராக இருக்க வேண்டும் (இரு கதவுகள் உள்ளது என்றால் இரண்டுபேர் பயன்படுத்தலாம், எனவே அது கூடாது) போடுகிற யூனிபார்ம் எதுவென்று சொன்னால் அவர்களே எடுத்து வருவார்கள். அதிகபட்சம் அதற்கு ஆயிரத்தைந்நூறு ரூபாய் ஆகும். ஆனால், அவர்களின் காஸ்ட்யூம் டிஸைனர் பத்தாயிரம் ரூபாய் பில் போடுவார். கேள்வி கேட்காமல் தர வேண்டும். காலை டிபன் என்று ஐந்தாயிரம் ரூபாய் பில் தருவார்கள். அப்படியென்ன டிபன் என்று கேட்க முடியாது. அதிகபட்சம் பால் ஊற்றி ஹெலாக்ஸ் சாப்டிருக்கும்.

நண்பர் கணக்குப் போட்டுப் பார்த்ததில் அனைத்தையும் ஒருங்கிணைத்து விளம்பரத்தை எடுத்துத் தந்தால் பத்தாயிரம் கையில் மிஞ்சுவது கடினம். யாரோ சம்பாதிக்க நாம ஏன் கஷ்டப்படணும் என்று விளம்பரமே வேண்டாம் என்று கேன்சல் செய்துவிட்டார்.

இது தமிழ் சினிமாவில் நாலுசதவீதம்தான். மீதத்தை கேட்டால் ஜீரணிக்க இரண்டு லிட்டர் ஜெலுசில் தேவைப்படும். பிறதுறைகளில் சம்பாதித்த பணத்துடன் அல்லது பரம்பரை சொத்தை விற்று படம் எடுக்க வருகிறவர்கள் இந்த அனாமத்து செலவுகளுக்கு கைநடுங்காமல் எப்படி கைழுத்து போடுகிறார்கள் என்பது ஆச்சரியம்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தயாரிப்பாளர்களுக்கு விடுதலையை தரட்டும்.

×Close
×Close