புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று இரவு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்த நிலையில் குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்று இரவு 10.30 மணிக்கு அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டது. அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை காண ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த கூட்ட நெரிசல் சிக்கி 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியானார். மேலும் அவரது குழந்தையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனையும் புஷ்பா 2வையும் பார்க்க தில்சுக் நகரில் இருந்து ரேவதி எனும் பெண் தனது குடும்பத்தினருடன் சென்றதாக கூறப்படுகிறது.
ரேவதியை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிபிஆர் எல்லாம் செய்து பார்த்தும் அவர் பிழைக்கவில்லை என மருத்துவர்கள் சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடைய குழந்தையும் கூட்ட நெரிசலில் சிக்கி, சீரியஸான நிலையில், மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், 10க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“