சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திர தம்பதியராக வலம் வரும் மணிரத்னம் - சுஹாசினி ஜோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுஹாசினி, தன் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வாவ் தமிழா யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
Advertisment
நடிகை சுஹாசினி மற்றும் இயக்குநர் மணிரத்னம் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராக இவர்கள் இருவரும் வலம் வருகின்றனர். இந்நிலையில் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாக சுஹாசினி கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, "எங்களுக்குத் திருமணம் ஆனபோது, நான் ஏறக்குறைய 90 படங்களில் நடித்து முடித்திருந்தேன். ஆனால், மணிரத்னம் அப்போது 5 அல்லது 6 படங்களை மட்டுமே இயக்கியிருந்தார். அவருடைய வங்கிக் கணக்கில் ₹15,000 மட்டுமே இருந்தது. ஆக, திருமண சமயத்தில் அவரை விட நான் தான் பெரிய வெற்றிகரமான நபராக இருந்தேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மேலும், திருமணத்திற்குப் பிறகு நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தையும் சுஹாசினி பகிர்ந்து கொண்டார். மணிரத்னத்தின் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு இரவு விருந்திற்குச் சென்றபோது, அந்த விருந்தின் போது அவருக்கு மட்டும் உணவு பரிமாறப்படவில்லையாம். "அவர்கள் வீட்டில் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் புதிதாகத் திருமணம் ஆனவள் என்பதால், மற்றவர்களுக்குப் பரிமாறப்பட்டதை போல எனக்கும் பரிமாறப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், மாமியார் மற்றும் மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட பின்னும் எனக்கு மட்டும் எதுவும் பரிமாறப்படவில்லை. நான் ஏன் என்று குழம்பிப்போய் அமர்ந்திருந்தேன்" என்று அந்த நிகழ்வை விவரித்தார்.
Advertisment
Advertisements
இந்த நிகழ்வு குறித்து மேலும் விளக்கமளித்த சுஹாசினி, “புதிதாகத் திருமணம் ஆனவர்கள் விருந்தின்போது சமைப்பவர்கள் அல்லது விருந்து கொடுப்பவர்களின் உதவியாளராகத்தான் இருக்க வேண்டும் என்பது அந்தப் பாரம்பரிய வழக்கமாக இருந்திருக்கிறது. அதனால் தான் எனக்கு உணவு பரிமாறப்படவில்லை” என்று கூறி அந்த சம்பவத்திற்குப் பின்னால் இருந்த காரணத்தையும் விளக்கினார்.