பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஓமங் குமார் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில், மோடி கேரக்டரில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாவதாக இருந்தது.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற படங்கள் வெளியாவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இதன்காரணமாக, படம் வெளியாகவில்லை.
இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பாருல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நடிகர் விவேக் ஓபராய் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது... ‘நான் ஒருவேளை அரசியலில் ஈடுபட நேர்ந்தால், 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் வதோதரா தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள அளவுகடந்த பாசம் மற்றும் அன்பை, அத்தொகுதி மக்களிடமிருந்து தானும் பெற விரும்புவதாக அவர் கூறினார். இந்த படத்தில் பிரதமர் மோடியின் கேரக்டரில் நடிப்பதற்காக, அவரின் உடல்மொழியை பலநாட்களாக கூர்ந்து கவனித்து, தன்னை அந்த கேரக்டருக்கு தயார்படுத்தி கொண்டதாக விவேக் ஓபராய் கூறினார்.