அதிரடி சினிமா கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல அடாவடி பேச்சுக்கும் சொந்தக்காரர் மன்சூர் அலிகான். இவர் அண்மையில் நடிகை திரிஷா கிருஷ்ணன் தொடர்பாக பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகின.
அண்மையில் இவர் வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 1990களில் தன்னுடன் நடித்த சில நடிகைகளின் பெயர்களை கூறி அவர்களுடன் பலவந்த காட்சிகளில் நடித்ததுபோல் திரிஷா உடன் நடிக்க முடியவில்லை எனப் பேசினார்.
இது சர்ச்சையான நிலையில் உண்மையில் தாம் அவரை உயர்த்திதான் பேசினேன், தாழ்த்தி பேசவில்லை என விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோர வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு மன்சூர் அலிகான் மறுத்துவிட்டார். இந்த நிலையில் அவர் மீது தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் ஆயிரம் விளக்கில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த மன்சூர் அலிகான், அடுத்த சில மணி நேரங்களில் அந்த மனுவை வாபஸ் பெற்றார். முன்னதாக தாம் மன்னிப்பு கேட்கும் சாதி கிடையாது என்றும் பேசியிருந்தார்.
இதற்கிடையில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். முதலில் விசாரணைக்கு ஆஜராக மறுத்த மன்சூர் அலிகான், தமக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறினார். அடுத்து உடல்நிலையை பொருட்படுத்தாமல் ஆஜராக உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகானிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிந்து வெளியே வந்த மன்சூர் அலிகானிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, “தாம் திரிஷாவை மதிக்கிறேன்; திரிஷா குறித்து தனிப்பட்ட முறையில் எதுவும் பேசவில்லை” எனக் கூறினார்.
மேலும் போலீசாரிடம் இது தன்னை பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என்றும் மன்சூர் அலிகான் விளக்கம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று, மன்சூர் அலிகானிடம் போலீஸ் விசாரணை சுமார் 1.30 மணி நேரம் நடந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“