சமீபத்தில் முன்னணி வார இதழ் அளித்த சிறந்த பாடகிக்கான விருது, பாடகி சின்மயின் அபிராமபுர வீட்டின் பக்கவாட்டு மேஜையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. ஆம்! ’96’ படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி விருதைப் பெற்றிருந்தார் சின்மயி. விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான அந்தப் படத்தில் மொத்தம் 8 பாடல்கள். அதில் 6 பாடல்களைப் பாடியிருந்தது சின்மயி தான்.
’வேற லெவல்’, ‘என்னால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ போன்ற கமெண்டுகள் அந்தப் பாடலுக்காக யூ-ட்யூபில் இடப்பட்டுள்ளன. '96' படத்தில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுக் கொண்ட த்ரிஷா கூட, சின்மயியைப் பார்த்து, ’சில நேரங்களில் என்னை விட அவர் தான் அதிக ஜானுவாக இருந்திருக்கிறார் எனத் தோன்றும்’ என்றார். (படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்துக்காக த்ரிஷாவுக்கு குரல் கொடுத்ததும் சின்மயி தான்)
இதற்கிடையே 4 மாதங்களுக்கு முன்பாக அக்டோபர் 2018-ல் ‘மீ டூ’ இயக்கம் ட்விட்டரில் ஹாட் ட்ரெண்டிங்கில் இருந்தது. அப்போது ஆரம்ப காலத்தில் தான் சந்தித்த பிரச்னைகளை சின்மயியும் பகிர்ந்தார். தமிழ் சினிமாவின் மூத்த பாடலாசிரியரும், பல தேசிய விருதுகளை வென்றவருமான வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் கிளப்பினார்.
”அப்போது வரை நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்ற உணர்வு என் மனதின் ஆழத்தில் இருந்தது” எனும் சின்மயி, சிங்கிள் மதரால் வளர்க்கப்பட்டிருக்கும் எனக்கும் அம்மாவுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பதே அப்போது பெரும் பிரச்னையாக இருந்தது” என்கிறார்.
”எனக்கு ஒரு வயது இருக்கும் போதே என் பெற்றோர்கள் பிரிந்து விட்டனர். விவாகரத்தான ஒருவரால் நான் வளர்க்கப்படுகிறேன் என்பது கூட தெரியாத சூழலில் தான் வளர்ந்தேன்” எனக் கூறும் சின்மயி “ஒரு வேளை மீ டூ இயக்கம் இந்தளவு சூடு பிடிக்காமல் இருந்திருந்தால், எனக்கு நடந்த பிரச்னையை என்னை சுற்றியிருக்கும் 10, 15 பேரிடம் மட்டுமே பகிர்ந்திருப்பேன். ஆனால் இந்த மாதிரி சம்பவங்களை நான் சார்ந்திருக்கும் திரைத்துறையிலேயே கேட்க நேரிட்டது. அப்பாது தான் நான் கட்டாயம் வாய் திறக்க வேண்டுமென நினைத்தேன்” என்கிறார்.
கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையைக் கற்ற சின்மயி, 2000-ம் ஆண்டு முன்னணி தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிறகு 2002-ல் லைம் லைட்டுக்கு வந்தார்.
2002-ல் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடினார். ”ஒரு முறை மேடையில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலைப் பாடும் போது, எதிர்பாராத விதமாக இடறி கீழே விழுந்து விட்டேன். அப்போது முதல் ஆளாக வீட்டுக்கு ஃபோன் செய்து, வைரமுத்து தான் என்னை நலம் விசாரித்தார். ஒரு நல்ல மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமென அப்போது நினைத்தேன்” என்று தன் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார் சின்மயி.
வைரமுத்து பிரச்னையிலிருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியிருக்கிறது சின்மயிக்கு. டப்பிங் யூனியன் பற்றி தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அங்கிருந்தும் அவரை விலக்கி வைத்திருக்கிறார்கள். டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி மேல் பாலியல் குற்றம் சாட்டினார்.
“ரஜினி நடித்திருந்த ’பேட்ட’ உட்பட 5 படங்களில் எனது வாய்ப்பு பறிபோனது. கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நான் பாடிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் வித்தியாசமாக தமிழ் திரையுலகில் எந்த வேலையும் (பாடல், டப்பிங்) கிடைக்கவில்லை. குறிப்பாக 96 மாபெரும் வெற்றியடைந்தது. வாழ்க்கை சுழற்சியில் வெற்றி வருடத்திற்கு ஆறு மாதத்துக்கு ஒருமுறை தான் வரும்.
வைரமுத்து மேல் இப்படியான புகாரை வைத்துக் கொண்டு உங்கள் திருமணத்துக்கு எப்படி அழைத்தீர்கள் என பலர் அந்த சமயத்தில் கேட்டார்கள். நான் அப்போது திரையுலகில் இருக்கும் மூத்தோர்கள் அனைவரையும் அழைத்தேன். அவரை மட்டும் அழைக்காமல் இருந்திருந்தால், அது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும்.
மீ டூ-வுக்குப் பிறகு வாழ்க்கை மாறியிருக்கிறது. இப்படியான ஆணாதிக்கத்தைப் பற்றி இப்போது பேசுகிறேன் என்றால் அதற்கான வலிமை என்னுடைய திருமணத்திலிருந்தும், எனது கணவர் ராகுல் ரவீந்திரனிடமிருந்தும் தான் கிடைத்திருக்கிறது. தென்னிந்திய திரைப்படத்துறையில் (கேரளாவை தவிர்த்து) இருக்கும் சில வலிமையானவர்களில் நானும் ஒராளாவதற்கு அவர் தான் காரணம். அதனால் என்னால் உணர்ச்சி வசப்பட முடியாது. பகுத்தறிவோடு தான் இருக்க வேண்டும்” என்கிறார்.
ஒரு விழாவில் ரஜினிகாந்த், நாசர் போன்ற பிரபலங்கள் வைரமுத்துவை வரவேற்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் சின்மயி. “அவர் தமிழுக்கு அதிக சேவை செய்ததாகக் கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்கின்றனர். தவறு செய்யும் அனைவருமே பவரில் இருக்கிறார்கள்.
இந்தக் கட்டத்தில் நமக்கு என்ன தேவை?. எந்த அட்ஜஸ்ட்மெண்டும் இல்லாத நாகரீகமான முறையில் வேலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னையை யாராவது காது கொடுத்து கேட்க வேண்டும். அதை நான் செய்வேன்” என புன்னகைக்கிறார் மெல்லிய குரலுக்கு சொந்தக்காரரான சின்மயி!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.