S Subhakeerthana
இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், 'இசையின் கடவுள்' இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி இதோ,
இளையராஜாவை எது இளையராஜாவாக்கியது?
நீங்கள் தான் அதை சொல்ல வேண்டும். என் பாடல்களை பார்த்து நானே பிரமிப்படைய மாட்டேன். உங்களுக்கு, நான் ராஜா சார். ஆனால், நான் எனது அடுத்தக் கட்டத்தை சிந்தித்தாக வேண்டும். தொடர்ந்து புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். யாராவது ஒருவரால் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு இசையமைத்து களைப்படையாமல் இருக்க முடியுமா? நான் இருப்பேன். ஏனெனில், நான் வேலை செய்யவில்லை. நான் செய்வதை ரசித்து செய்கிறேன். அது ஒரு வழக்கமான வேலை கிடையாது. நான் எனது ரசிகர்களுக்காக இசையமைக்கிறேன், அது அவர்களது உணர்வுகளைத் தீண்டுகிறது. நான் எப்போது இசையமைக்கிறேனோ, அது என்னுடையதாகிறது. அது எப்போது அவர்களை சென்றடைகிறதோ, அப்போது அவர்களுடையதாகிறது. எனது இசையால் மக்கள் அவர்களையே மறக்கின்றனர். அது அற்புதமானது. ஒருமுறை, ஹோட்டல் ஒன்றில் நான் டியூன் வாசித்துக் கொண்டிருந்த போது, என் அறையை கடந்த ரஷ்யப் பெண்மணி ஒருவர், அறைக்குள் வந்து இசையைக் கேட்டார். மீண்டும் அவர் அந்த டியூனை இசையமைக்கக் கேட்டார். அவர் கண்களில் கண்ணீர். மொழி தெரியாததால், அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
எப்படி அது சாத்தியமானது?
நான் எல்லாவற்றையும் அதன் போக்கில் விட்டுவிடுவேன். பறவை திட்டமிட்டு பறந்து செல்லாது. நானும் அப்படித்தான். நான் மெனக்கட்டு இசையமைத்தால், அதில் ஜீவன் இருக்காது. இசை அதுவாக வர வேண்டும். அதைத் தான் நீங்கள் 'மேஜிக்' என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். எனக்கும், ஆர்மோனியத்துக்கும் இடையே ஏதோ நடக்கிறது. அதை விளக்குவது கடினம். நான் இந்த பரந்த, தெய்வீக கடலில் ஒரு துளி தண்ணீர் போல.
ஒவ்வொருத்தரின் இசையும் அவர்களது சொந்த வாழ்க்கையின் அனுபவத்தில் இருந்து உருவானவை. என்னைப் பொறுத்தவரை இசை, ஆன்மீகத்தைப் போன்றது. ஒருவரை தடம் தெரியாத தளத்திற்கு கொண்டுச் சென்றுவிடும். எனது ஆரம்பக்கட்ட நாட்களில், இரவு 11.30 மணி வரை ஸ்டூடியோவில் இருப்பேன். அதன் பிறகு வீட்டிற்கு சென்று குளித்து, 2 மணி வரை இசை எழுதுவேன். மீண்டும், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இசைப் பணிகளை செய்து, 7 மணிக்கு ஸ்டூடியோ செல்வேன். இசை தான் எனக்கு எல்லாமுமே. எனது கனவில் கூட, இசையைப் பற்றியே நான் நினைத்துக் கொண்டிருப்பேன்.
ஒவ்வொரு முறையும் படத்தை எடுப்பவர்கள் என்னிடம் வந்து பாடலுக்கான சூழலை சொல்லும் போது, நான் மெட்டை முனுமுனுக்க தொடங்கிவிடுவேன். அவர்கள் என் ஆற்றலை நம்புவார்கள். எப்படி? இன்னமும் நான் அதற்கான விடையை தேடிக் கொண்டிருக்கிறேன்.
இசையமைக்கும் பாணியை தகர்த்து புதிய பரிமாணத்தை உட்புகுத்தி வெற்றியும் கண்டவர் நீங்கள். எந்த தருணத்திலாவது, அதை அழுத்தமான உணர்ந்து இருக்கிறீர்களா?
வெற்றியும் தோல்வியும் பொருள்சார் மக்களுக்கே; எனக்கில்லை. நான் என்ன செய்கிறேனோ அதில் 100 சதவிகிதத்தை நான் தருகிறேன் - மற்றவர்கள் அதை எப்படி பார்க்கிறார்கள் என்பதை நான் நினைப்பதில்லை.
காப்புரிமை மற்றும் ஆதாய உரிமை பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகரித்து வருகிறேது.
மிகச்சரி. நான் இதை செய்த போது, இந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இசை அமைக்கும் பணிக்கே நான் எனது முழு நேரத்தையும் செலவிடுகிறேன். மற்றதை பற்றி நினைத்துப் பார்க்கக் கூட எனக்கு நேரமில்லை. எனது அனைத்து பாடல்களுக்குமான உரிமைக்காக மட்டுமே நான் கேள்வி கேட்டேன். அவையெல்லாம் என்னுடைய படைப்புகள், அதன் மூலம் யாரேனும் பணம் சம்பாதித்தார்கள் என்றால், அதில் எனக்கு பங்கு வேண்டாமா? அதை நான் கேட்டால், எப்படி அது தவறாகும்?
உங்களுக்கும், எஸ்.பி.பிக்கும் இடையேயான பிணக்கு முடிவுக்கு வந்ததை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
எனக்கு சந்தோஷமே.
உங்களுடைய மிகப்பெரிய பயம் என்ன?
நான் யாரையும் கண்டு பயப்படவில்லை. பிறப்புக்கு நான் அஞ்சேன்.