இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடு கலந்தவர். இளையராஜா இசை இல்லாமல் கடக்கவே முடியாது. 75 வயதிலும் இசை ரசிகர்களைக் கவரும் விதமாக, அதே இளமையுடனும் புதுமையுடனும் இசையமைத்து வருகிறார். 3 தலைமுறை ரசிகர்களை தனது இசையால் மயக்கி வைத்திருக்கிறார்.
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி திரைப்படத்தில் தொடங்கிய இளையராஜாவின் திரை இசைப் பயணம் அரை நூற்றாண்டை நெருங்குகிறது. இந்த நீண்ட பயணத்தில் 1000 படங்களுக்குமேல் 5,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். அண்மையில்கூட, மேற்கத்திய செவ்வியல் இசையான சிம்பொனியை எழுதி முடித்துள்ளார். இந்த சிம்பொனி ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளையராஜா பணத்தை நோக்கமாகக் கொள்ளாமல், பெரிய ஸ்டார் நடிகர், புதுமுக நடிகர், பெரிய பட்ஜெட் படம், சிறிய பட்ஜெட் படம் என்று பார்க்காமல் எல்லா படத்துக்கும் சமமாக சிறந்த இசையை வழங்கியுள்ளார். படம் தொடங்குவதற்கு முன்னரே, இளையராஜாவிடம் பாடல்களை வாங்கிக்கொண்டுதான் படப்பிடிப்புக்கு செல்வார்கள். இளையராஜாவின் டியூன்களுக்காகவே ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள், இளையராஜாவின் இசைக்காகவே படம் திரையரங்குகளில் ஓடியது என்பது வரலாறு.
இளையராஜாவின் பல சூப்பர் ஹிட் பாடல்கள், திரைப்படங்களில் இடம்பெறாமல் போனது உண்டு. அப்படி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் படத்துக்காக இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு பிரபலமான பாடல், ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ திரைப்படத்தில் இடம்பெறாமல் போனது. இந்த பாடல் ஏன் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறித்து யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி பேசியுள்ளார்.
இயக்குநர் டி.என். பாலு இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் 1978-ம் ஆண்டு சட்டம் என் கையில் படம் வெளியானது. இந்த படத்தில் ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ என்ற இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்; மலேசியா வாசுதேவன், எஸ்.பி. ஜானகி பாடியிருந்தனர்.
இந்த பாடல் எப்படியானது என்றால், கணவன் - மனைவி இருவரும் தங்கள் குழந்தையை வாழ்த்திப் பாடுவது போன்றது. கணவன் கொஞ்சம் ரவுடியாகவும் விட்டேத்தியாகவும் இருப்பவன். மனைவிதான் குடும்பத்தை நடத்துகிறது. இவர்கள் இருவருமே குழந்தையைக் கொண்டாடுகிற வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு இளையராக சிறப்பாக இசையமைத்துள்ளார்.
‘ஆழக்கடலில் தேடிய முத்து, ஆசைக் கடலில் தோன்றிய முத்து, எங்க ராஜாக்கண்ணு ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு’ என்று எஸ்.பி. ஜானகி முதலில் பாடுவார். இந்த பாடல் ஒரு மீனவர் சூழலுக்கு ஏற்ற மாதிரி அமைக்கப்பட்டிருக்கும். பாடல் முழுவதும் கடல்,சிப்பி், தென்றல், ஓடம் என மீனவர் மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை ஒட்டி இருக்கும். இந்த பாடலின் இசையும் ஒரு கப்பல் செல்வதைப் போல அமைந்திருக்கும்.
சட்டம் என் கையில் படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தில், அசோகன், புஸ்பலதா, ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீபிரியா, காந்திமதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில், அசோகன் திருடனாக, ரவுடியாக இருப்பார். சிறைக்கு எல்லாம் செல்வார். தேங்காய் சீனிவாசன் வக்கீலாக இருப்பார். அசோகனின் மகன் ஸ்ரீகாந்த் திருடன் என்று ஒரு வழக்கில் தண்டனை வாங்கித் தருவார் தேங்காய் சீனிவாசன். அவரிடம் சென்று அசோகன் எனது மகனை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுவார். ஆனால், நீ திருடன், ரவுடி உனது மகனும் திருடனாகத்தான் இருப்பான் என்று மறுத்துவிடுவார். இதனால், கோபம் அடையும் அசோகன் உனது மகனை திருடனாக்குகிறேன் என்று தேங்காய் சீனிவாசனுக்கு இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை, அசோகன் யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து திருடனாக, ரவுடியாக வளர்ப்பார். இந்த படத்தில் கமல்ஹாசன் திருடனாக, ரவுடியாக இருப்பார்.
இந்த பாடல், படம் ஷூட்டிங் செல்வதற்கு முன்பே பதிவு செய்யப்பட்டது. ஆனால், படத்தின் கதை வேறு எங்கோ சென்று விட்டது. அதனால், இந்தப் படத்தில் ‘ஆழக்கடலில் தேடிய முத்து’ பாடல் பொருந்தாததால், படத்தில் வைக்கவில்லை என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.