தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய ஆளுமைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் முக்கியமானவர் இளையராஜா. இந்தியா ஜனநாயக நாடாக இருக்கலாம், ஆனால், தமிழ் சினிமா உலகில் 50 ஆண்டுகளாக இளையராஜாவின் ஆட்சிதான் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவருக்கு முன்னே ஓடியவர்கள், அவருடன் ஓடியவர்கள், அவரை மிஞ்சி ஓடியவர்கள் எல்லோரும் ஓய்ந்த பின்னரும் இளையராஜா தனது இசையால் இதயங்களைத் தொட்டு இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.
இசையில் இளையராஜாவின் சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா என்றால் பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால், 1000 படங்களுக்கு மேல் 5,000 பாடல்களுக்குமேல் இசையமைத்திருக்கும் இளையராஜா, 3 தலைமுறை இசையைமைப்பாளர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இசையமைத்து வருகிறார். உண்மையில், மூன்றாவது தலைமுறை இசையமைப்பாளர்கள் சிறப்பான இசையை அளித்தாலும் மூச்சு வாங்கி நிற்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இசைஞானி 5,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும், அவருக்கு மிகவும் பிடித்தமான ராகம் இதுதான் என்று அவருடைய சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் அந்த ராகத்தில் அமைந்த சூப்பர் ஹிட் பாடலைக் குறிப்பிட்டு கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, அந்த ராகத்தில் இளையராஜா இசையமைத்த பல பாடல்களைக் கூறுகிறார்.
இளையராஜாவுக்கு பிடித்தது என்ன ராகம், அந்த ராகத்தில் அமைந்த ஹிட் பாடல்கள் எவை எவை என்று கங்கை அமரன், மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடன் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அந்த பாடலை தத்தகாரமாகப் பாடுகிறார்.
இளையராஜாவுக்கு மிகவும் பிடித்தமான ராகம் சிவரஞ்சனி என்று கங்கை அமரன் கூறுகிறார். அந்த ராகத்தில், “அடி ஆத்தாடி இளம் மனசுல ரெக்க கட்டி பறக்குது சரிதானா?” என்ற பாடல், அரண்மனை அன்னக்கிளி தரையில நடக்குது அடுக்குமா? என்ற பாடல், ஏ ஆத்தா ஆதோரமா வாரியா என நிறைய ஹிட் பாடல்களை இளையராஜா தனக்கு பிடித்தமான சிவரஞ்சினி ராகத்தில் இசையமைத்துள்ளார் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“