பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலக அறை தகர்க்கப்பட்டுள்ளதால் அவர் மனமுடைந்துள்ளதாக இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இசையுலகில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இசை ராஜ்ஜியம் நடத்திவருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய புகழ்பெற்ற பல பாடல்கள், இசை ஆல்பங்கள் எல்லாமே அவர் 35 ஆண்டுகளாக இசையமைத்து வரும் பிரசாத் ஸ்டுடியோவில்தான் உருவானது. சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோ கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டப்போவதாக அதன் உரிமையாளர் இளையராஜாவை திடீரென அலுவலகத்துக்கு வருவதை தடுத்து நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது அறையை ஒருமுறை பார்த்தால் மட்டும் போதுமானது என்று கூறி, தனது அறையைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரின் மேற்பார்வையில், இன்று இளையராஜா தரப்பினர் பிரசாத் ஸ்டுடியோவைப் பார்வையிட்டனர்.
இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் பிரசாத் ஸ்டுடியோவைப் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இன்று உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இசைஞானி இளையராஜா உபயோகப்படுத்திய பிரசாத் ஸ்டுடியோவிற்கு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் லட்சுமி நாராயணன் மற்றும் அவருடைய வழக்கறிஞர்களாக நானும் தியாகராஜனும் இன்று இங்கே வந்திருந்தோம். முக்கியமாக இசைஞானி இளையராஜா இந்த பிரசாத் ஸ்டுடியோவிற்கு ஒருமுறையாகவாவது வரவேண்டும் என்று சொன்னதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், அவருக்கென்று அங்கே ஒரு பிரத்யேகமான தனி அறை இருக்கிறது. அந்த தனி அறையில் உட்கார்ந்துதான் அவர், இசைத்தட்டுகள் கம்போஸ் செய்வது என்று எல்லாமே அந்த தனி அறையில்தான் செய்துகொண்டிருந்தார். அந்த தனி அறையின் சாவி இளையராஜாவிடம் இன்றளவும் இருக்கிறது. அந்த தனி அறையைப் பார்வையிட வேண்டும். அவருக்கு சொந்தமான பிரத்யேகமான புகைப்படங்கள், அவரது பத்ம விபூஷன் விருது அந்த தனி அறையில்தான் இருக்கிறது. அவர் அதை ஒரு பூஜை அறைபோல பாவித்து வந்தார். அங்கே அவர் ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு சிறு தியானம் செய்ய வேண்டும் என்ற அந்த நோக்கத்திலே தான் சென்னை உயர் நீதிமன்றத்திலே இன்று உத்தரவை வாங்கினோம். ஆனால், இங்கே வந்து பார்த்தபொழுது, அதிர்ச்சிகரமாக அந்த அறையே இல்லை. அந்த அறைக்கான சாவி இளையராஜாவிடம் இருக்கிறது. ஆனால், அந்த அறையே இல்லை. அந்த அறை தகர்க்கப்பட்டு அந்த அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் அருகே உள்ள ஒரு கொடவுனில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பொருட்களை சரிபார்க்கும் பணி மற்றும் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று சரிபார்க்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது.
இளையராஜாவின் அறை அங்கே இல்லை. அந்த அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் தனியான ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இளையராஜாவின் அறை அங்கே இருந்ததற்கான சுவடே இல்லை என்பதை இளையராஜாவிடம் நாங்கள் தெரிவித்தோம். இதைக்கேட்டதும் அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார். அந்த அறையைப் பார்க்க வேண்டும். அந்த அறையில் இருக்கும் பொருட்களை பார்க்க வேண்டும் என்ற முனைப்பில்தான் நான் வர வேண்டும் என்று சொன்னேன். அந்த அறையே இல்லை என்றால், நான் இங்கே வந்து என்ன செய்வது? அங்கே வந்து பார்த்தால் என்னுடைய மனவேதனை இன்னும் அதிகமாகும். அதை தாங்கிக்கொள்ள இயலாது. நான் ஏன் அங்கே வரவேண்டும் என்று இளையராஜா இன்று இங்கே வரவில்லை.
வழக்கறிஞர் ஆணையர் அங்கே இருக்கக்கூடிய மற்ற பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அடுத்தக் கட்டமாக என்ன செய்வது என்பதை இசைஞானி இளையராஜாவோடு கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்.” என்று கூறினார்.
இதற்கு 4 மணி வரை மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் இன்றைக்கே முடிவெடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த சரவணன், “இல்லை. 5 மணி வரை அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சிறிது நேரம் அதிகமானால், வழக்கறிஞர் ஆணையர் அவரே முடிவெடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று முடியவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்ககூடிய அதிகாரம் நம்முடைய வழக்கறிஞர் கமிஷனுக்கு இருக்கிறது.” என்று கூறினார்.
இசைக் குறிப்புகள், இசைக் கருவிகள் காணாமல் போயிருக்கிறதா? அல்லது எல்லாமே சரியாக இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர்கள் சரவணன் மற்றும் தியாகராஜன் “அது இருக்கிறதா? இல்லைய என்பதை அங்கே இருந்த பொருட்களின் பட்டியலைப் பார்த்து சரிபார்த்த பிறகுதான், அவை இருக்கிறதா? இல்லையா என்பது தெரியும்.” என்று கூறினார்கள்.
அந்த அறையில் ரமண மகரிஷி புகைப்படம் இருந்தது அந்த படம் அகற்றப்பட்டு ஒரு ஓரமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்களே என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் சரவணன், “ஆமாம், ரமண மகரிஷியின் புகைப்படம் அகற்றப்பட்டு ஒரு ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. அதை இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறோம். எல்லாவற்றையும் தனி அறையில், போட்டு அழுத்தி வைத்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.
மேலும், இந்த பிரச்சினை குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கிய வழக்கறிஞர் சரவணன், “இப்போது நீங்கள் யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு என்று ஒரு அலுவலகம் இருக்கிறது. நீங்கள் 35 வருடமாக அந்த அலுவலகத்துக்கு போய்விட்டு வந்துகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று உங்களை அந்த அலுவலகத்துக்கு போக முடியாது என்று கூறி தடுத்துவிடுகிறார்கள். அந்த அலுவலகத்தையே இல்லாமல் செய்துவிட்டு, அந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் இன்னொரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். இதை இன்றுதான் உறுதிப்படுத்திக்கொண்டோம். இதை உறுதிப்படுத்திக்கொண்டவுடன், இளையராக மிகமிக மனவருத்தத்தில் இருக்கிறார். இப்படி ஆகும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை. அங்கே மொத்தம் ஒரு 5 அறைகள் இருக்கிறது. ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் இருக்கிறது. மற்ற இடங்கள் இருக்கிறது. அதெல்லாம் போனால்கூட பரவாயில்லை. அவருடைய அறை இருக்கும் என்று நினைத்தார். அவருடைய பத்மவிபூஷன் விருதுகூட அந்த அறையில்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட அறையில்தான் அவருக்கு அனுமதி இல்லை என்று மறுத்துவிட்டார்கள். அதனால்தான், அவர் மிகவும் மனமுடைந்து நான் வரக்கூடிய மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார்.” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய வழக்கறிஞர் தியாகராஜன், “அங்கே அவர் கைப்பட எழுதிய இசைக்குறிப்புகள் இருக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட விருதுகள் இருக்கிறது. அவருடைய பிரத்யேகமான முக்கியமான பொருட்கள் எல்லாம் இருக்கிறது. மேலும், அங்கே முக்கியமான புகைப்படங்கள், அவருக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் மிக உயர்வான பொருட்கள் அங்கே இருக்கிறது அதையெல்லாமே ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரால் மட்டுமில்லை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது குறித்து அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
தொடர்து பேசிய இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன், “அங்கே என்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவே நீதிமன்றமே வழக்கறிஞர் ஆணையரை நியமனம் செய்துள்ளது. அவர் அங்கே என்ன சூழ்நிலை இருக்கிறது என்று குறிப்பெடுத்துக்கொள்வார். அங்கே இருக்கக்கூடிய பொருட்களை வெளியே எடுப்பார். இந்த பொருட்களை எல்லாம் இங்கே இருந்து எடுத்து நாங்கள் அனுப்பியுள்ளோம் என்று தெரிவிப்பார். அது பதிவாகிவிடும். அதற்குப் பிறகு, இந்த பொருட்களையெல்லாம் பார்த்து அவற்றின் நிலைமையைப் பார்த்துவிட்டு அதற்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பொருத்திருந்து முடிவு செய்வோம். இளையராஜா ஏதோ இந்த இடத்துக்கு சொந்தம் கொண்டாட முயல்கிறார் என்று ஒரு பொய்யான விஷயத்தை உருவாக்க விரும்புகிறார்கள். இதை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
அவர் 35 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அந்த அறையில் இருந்துதான் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கையெல்லாம் நான் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். அந்த அறையை 1 மணி நேரம் என்னைப் பார்க்கவிட்டால் போதும் என்று எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்று இளையராஜா உத்தரவாதம் அளித்தார். அந்த அறையே இல்லை என்கிறபோது அவரால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக இதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இப்போது, அந்த அறையே இல்லை என்பது அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை உருவாக்கியிருக்கிறது” என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.