இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா திடீர் விசிட் அடித்துள்ள நிலையில், தனது ஸ்டூடியோவில் டி.எஸ்.பி வைத்துள்ள இளையராஜாவின் உருவ படத்தின் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
1999ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேவி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் தேவி ஸ்ரீ பிரசாத். தொடர்ந்து 2003-ம் ஆண்டு தமிழில் வெளியான இனிது இனிது காதல் இனிது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். திருப்பாச்சி, சந்தோஷ் சுப்ரமணியம், சிங்கம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இதனை வெளிப்படுத்தும் வகையில், தேவி ஸ்ரீ பிரசாத் தனது ஸ்டூடியோவில், இளையராஜாவின் லைஃப் சைஸ் மோனோக்ரோம் படத்தை வைத்துள்ளார். இதனிடையே தற்போது இளையராஜா தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இவர்கள் இவரும் சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தேவி ஸ்ரீ பிரசாத் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ஒன்றில், இளையராஜாவின் புகைப்படத்தின் அருகில் இருவரும் நிற்கின்றனர்.
இந்த பதிவில், தனது உணர்வுகளை விவரிக்கும் உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ள தேவி ஸ்ரீ பிரசாத், "சிறு குழந்தையாக இருந்தபோது, இசை என்றால் என்ன என்பதை நான் அறிவதற்கு முன்பே, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சாரின் இசை என் மீது ஒரு மந்திர உச்சரிப்பை ஏற்படுத்தியது. இளையராஜா மற்றும் அவரது இசையால் தான் இசையமைப்பாளர் ஆனேன்.
எனது கனவை இறுதியாக நிறைவேற்றியதும், அவர் தான். அதனால் தான் எனது ஸ்டுடியோவில் இளையராஜாவின் பிரமாண்டமான படத்தை வைத்துள்ளேன். “இளையராஜா சார் ஒரு நாள் என் ஸ்டுடியோவுக்கு வர வேண்டும், அவருடைய படத்திற்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவாக இருந்தது.
மேலும், “பிரபஞ்சம் எப்போதும் நமது உண்மையான ஆசைகளையும் அன்பையும் நனவாக்க உதவி செய்கிறது. அதன்படி இறுதியாக, எனது இந்த கனவு நனவாகியது. இது என் வாழ்வின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். உங்கள் தெய்வீக இருப்பை எனது ஸ்டுடியோவிற்கு கொண்டு வந்து என்னையும் எனது குழுவையும் ஆசீர்வதித்ததற்காக இசைஞானி இளையராஜா அய்யா அவர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“