இசைஞானி சுயசரிதம்: பலகோடி மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போயிருக்கிறார் இசைஞானி இளையராஜா!
மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே சொந்தமென கொண்டாடப் பட்ட இசையை, பாமரனுக்கு பங்குப் போட்டுக் கொடுத்த பெருமை இவரை மட்டுமே சேரும்.
சோகமோ, மகிழ்ச்சியோ அனைத்துக்கும் இளையராஜாவின் இசையை பொருத்திப் பார்க்கும் ரசிகர்களே அதிகம்.
அவரது 75-வது பிறந்தநாள் சென்ற ஜூன் முதல் வெவ்வேறு கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்விழா சென்னை ஐ.ஐ.டி-யில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட இளையராஜா, “ஜனனி ஜனனி” பாடலோடு பேசத் தொடங்கினார்.
”நல்ல விஷயங்களை வெளிக் கொண்டு வரும் இசைக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிலையங்களிலும் இசையை பாடமாக்க வேண்டும்” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்படும் இசைக்கு தான் உணர்வுகள் அதிகம். கம்ப்யூட்டர் இசையில் அத்தகைய ஆத்மார்த்த உணர்வைப் பெற முடியாது. எனக்கு எப்போதுமே உணர்வுப்பூர்வமான இசை தான் பிடிக்கும். 1978-ல் 56 வாரங்களில் 58 படங்களுக்கு இசையமைத்தேன்” என்றார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப் பாடல்களைப் பாடி மாணவர்களின் கை தட்டல்களை அள்ளினார். பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இளையராஜா, தான் சுயசரிதம் எழுதப் போகும் விஷயத்தைத் தெரிவித்தார். அதோடு இந்தப் புத்தகம் விரைவில் வெளிவரும் எனவும் கூறினார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!