இசைஞானி இளையராஜாவின் இசையில் மயங்காதவர்களே இருக்க முடியாது.
Advertisment
குறிப்பிட்ட சமூகத்திற்கானது என்றிருந்த இசையை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் அதிகளவு பங்கு ராஜாவினுடையது தான்.
இவரது போன பிறந்தநாளை பல கல்லூரிகளில் கொண்டாடி வந்தார்கள். இந்நிலையில் வரும் (ஜூன்2) பிறந்தநாளில் இசைக் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜேசுதாஸ், எஸ்.பி.பால சுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள் கலந்துக் கொண்டு பாடுகிறார்கள்.
இது சம்பந்தமாக இணையதளம் ஒன்றின் நேர்க்காணலில் கலந்துக் கொண்டார் இளையராஜா. அப்போது, சமீபமாக வரும் படங்களில், பழைய படங்களின் பிரபல பாடல்கள் இடம் பெறுகிறது, அதற்கு உதாரணம் ‘96’ படம். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ராஜாவிடம் கேட்டார் தொகுப்பாளர்.
அதற்கு பதிலளித்த அவர், “அதெல்லாம் தவறான விஷயங்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் நடக்கும் காட்சியில், அந்தக் காலகட்டத்திற்கான பாடலை குறிப்பிட்ட இசையமைப்பாளர் இசையமைத்து பயன்படுத்த வேண்டும். ஆனால் இவர்கள் ஏற்கனவே புகழ்பெற்ற பாடலை பயன்படுத்துகிறார்கள். இது அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது. 80-களில் வெளியானப் பாடல் என்றால் அதற்கு நிகரானப் பாடலை இசையமைத்துப் பயன்படுத்த வேண்டும். ஏன் இசையமைக்க முடியவில்லை. எனது இசையை மக்களிடமிருந்து பிரிக்க முடியவில்லை. ஆகவே எனது பாடலை பயன்படுத்துகிறார்கள். இது ஆண்மையில்லாத் தனம்” என்றார்.
இளையராஜாவின் இந்தப் பதில் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தவிர, ஜூன் 2-ம் தேதி நடக்கும் ‘இசை செலப்ரேட்ஸ் இசை’ என்ற கச்சேரியில் எஸ்.பி.பி பாடுவதை முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். இதன் பொருட்டு நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த இவர்கள் தற்போது சந்தித்துள்ளனர். அப்போது கட்டித் தழுவி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தை தனது முகநூலில் வெளியிட்டிருக்கிறார் இளையராஜா.