இசையமைப்பாளர் இளையராஜா 75 பிறந்த நாளை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது.
Advertisment
‘இளையராஜா 75’ என்ற இந்த நிகழ்ச்சி, வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 6) சென்னை மகேந்திரா சிட்டியில் இதன் தொடக்க விழா மற்றும் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. அதில், இளையராஜா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டவர்கள் பாராசூட் பலூனில் பயணித்து நிகழ்ச்சியின் தொடக்க விழாவை தொடங்கி வைத்தார்.
இளையராஜா 75 பாராட்டு விழா
இந்த நிகழ்வில் பேசிய விஷால், “ராஜாவின் இசை எப்போதும் என்னுடன் இருக்கிறது. சந்தோஷம், துக்கம் என எல்லா உணர்வுகளிலும் நேரத்திலும் அவருடன் இசை தான் என்னுடன் இருக்கும். தயாரிப்பாளர் சங்க பிரச்சனையின் போதும் ராஜா சாரின் இசை தான் என்னை மீட்டு வந்தது.
பிப்ரவரி 2-ம் தேதி அனைத்து மொழிக் கலைஞர்களும் கலந்து கொள்ளும் பாராட்டு விழா நடைபெறுகிறது. தமிழக முதல்வர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, கமல், எஸ்.பி.பி. என பல விஐபிகளை அழைக்கவிருக்கிறோம். மற்றும் அவர் இசையமைத்த பாடல்களுக்குக் கிடைக்கும் ராயல்டியில் ஒரு தொகையை தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளைக்குத் தர இளையராஜா ஒப்புக் கொண்டுள்ளார்” என்று புகழ்ந்துரைத்தார்.
அதன் பின்னர் பேசிய விழா நாயகன் இளையராஜா, “என்னைக் கடவுள் அளவுக்கு இங்கு சிலர் உயர்த்தி பேசினார்கள். என்னை உயர்த்தி, கடவுளை தாழ்த்தக்கூடாது. அது தவறு. நான் ஒரு சாதாரணமான மனிதன். உங்களைப் போன்றே நானும் ரத்தம், சதை கொண்ட மனிதன். என் இசை நிகழ்ச்சியின் தொடக்க விழாவே பிரமாண்டமாக இருக்கிறது. பிப்ரவரியில் நடக்கும் நிகழ்ச்சி இன்னும் பிரமாண்டமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.