இளையராஜா 75 விழாவில், ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை உட்பட தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவரை சென்னையில் உள்ள பல கல்லூரிகளில் விருந்தினராக அழைத்து கேக் வெட்டி, பாடல் பாடி கௌரவித்து வருகின்றனர்.
இளையராஜா 75 நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்பு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் “இளையராஜா - 75” விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக இசைஞானியின் சினிமா வரலாற்றில், நல்ல பாடல்களை அவர் இசையமைத்தற்கு அதிகமாக வாயசைத்தவர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் அவர்களையும் இவ்விழாவிற்கு வர வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இளையராஜா - 75 : கடவுளை தாழ்த்தக்கூடாது, நான் ஒரு சாதாரண மனிதன்
இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR பிரபு, ‘இளையராஜா - 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க உறுதியளித்துள்ளதாக விழாக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோன்று கமல்ஹாசனும், பங்கேற்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இளைராஜா விழாவில் அவரது ரசிகர்கள் பலரும் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என ஆர்வம் காட்டி வரும் நிலையில், அங்கு வரும் கமல் - ரஜினி ரசிகர்களுக்கு இவர்களின் வருகையே பெரும் சர்பிரைசாக உள்ளது.