விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் உள்ளது. இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார் மற்றும் அவரது வளர்ப்பு மகளான ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்களின் பிறப்பிடமாக இது கருதப்படுகிறது. இக்கோயில் மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்நிலையில் இன்று (டிச.16) இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்ய அங்கு சென்றுள்ளார். அப்போது, கருவறை முன் இருக்கும் அர்த்த மண்டபத்திற்கு இளையராஜா சென்ற போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி ஜீயர்கள், பக்தர்கள் முறையிட்டு அவரை தடுத்து உள்ளனர்.
இதன் பின் இளையராஜா அர்த்த மண்டபத்தின் படி அருகே நின்றவாறு கோவில் மரியாதையை ஏற்று சாமி தரிசனம் செய்து சென்றார். முன்னதாக, அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆண்டாள் கோவிலில் கருவறை போலவே அர்த்தமண்டபமும் பாவிக்கப்படுகிறது. அங்கு ஜீயர்கள், பட்டர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. மேலும் எந்த பொது மக்களும் இதுவரை அர்த்தம் மண்டபத்திற்குள் சென்றதில்லை.
ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அனுமதி கிடையாது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது என்று கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“