பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.200 கோடி வசூலித்து, முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமரர் கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணி ரத்தினம் படமாக எடுத்தார். இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, மாமன்னர் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர் பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
பெரிய பழுவேட்டயராக சரத் குமாரும், சின்ன பழுவேட்டயராக பார்திபனும் நடித்திருந்தனர். மேலும் ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராமும், பிரம்மராயராக பிரபும், விஜயாலய சோழனாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர படத்தில் பல்வேறு நட்சத்திரங்களும் உள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று இன்றளவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
அந்த வகையில், படம் வெளியான போது முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 127.68 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து, தற்போது மூன்றாவது வார இறுதியில் ரூ.202.70 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கு முன்னர் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ்நாட்டில் ரூ.180 கோடியை வசூலித்து இருந்தது.
இந்தப் படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. பொன்னியின் செல்வன் தற்போதுவரை ஒட்டுமொத்தமாக ரூ.435.50 கோடி வசூலித்துள்ளது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“