இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.3 கோடிக்கு மேல் வருமானத்தை அவருடைய ரஹ்மான் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மானை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வருமானவரித் துறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வருமானவரித் துறையின் முதுநிலை ஆலோசகர், டி.ஆர்.செந்தில் குமார், உயர் நீதிமன்ற வழக்கில் குறிப்பிடுகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2011-12ம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். லிப்ரா மொபைல் நிறுவனத்தின் மொபைல்களுக்கு பிரத்யேகமான ரிங்டோன்களை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கித் தருவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.3.47 கோடி வருமானத்தைப் பெற்றார். இந்த ஒப்பந்தத்தின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த ஒப்பந்தத்தின்படி, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஊதியத்தை நேரடியாக அவர் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு செலுத்துமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
மேலும், “ஏ.ஆர்.ரஹ்மானால் பெறப்படும் வருமானத்துக்கு வரிவிதிக்கப்பட வேண்டியது அவசியம். ஏ.ஆர்.ரஹ்மான் வருமானத்தைப் பெற்ற பிறகு, அதைஅறக்கட்டளைக்கு மாற்றலாம். ஆனால், அறக்கட்டளையின் வருமானம், வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படுவதால், அதை அறக்கட்டளைக்கு திருப்பிவிட முடியாது” என்று வருமானவரித்துறை முதுநிலை ஆலோசகர் கூறினார்.
இது குறித்து வருமானவரித் துறையால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் வருமானவரித் துறை தீர்ப்பாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால், வருமானவரித் துறை உயர் நீதிமன்றத்தின் முன் மேல் முறையீடு செய்தது.
வருமானவரித் துறை ஏ.ஆர்.ரஹ்மான் மீது தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.