குழந்தைகளை மகிழ்விக்க வரும் இன்கிரிடிபிள்ஸ் 2

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகம் கொள்ளவைக்கும் படம் இது.

பாபு

பதினான்கு வருட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ’தி இன்கிரிடிபிள்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 22 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகம் கொள்ளவைக்கும் செய்தி இது.

2004 இல் ’தி இன்கிரிடிபிள்ஸ்’ வெளியான போது உலகம் முழுவதும் இன்கிரிடிபிள் குடும்பத்தின் ரசிகர்களாக மாறியது. 92 மில்லியன் டாலர்களில் தயாரான இந்த அனிமேஷன் படம் யுஎஸ்ஸில் மட்டும் 261 மில்லியன் டாலர்களை கடந்து வசூலித்தது. உலகம் முழுவதும் சுமார் 631 மில்லியன் டாலர்கள்.

ஒரு படம் அசாதாரணமாக வசூலிக்கும் போது அதன் அடுத்தப் பாகத்தை இரண்டு வருடங்களுக்குள் எடுத்துவிடுவது ஹாலிவுட் வழக்கம். தி இன்கிரிடிபிள்ஸ் சூப்பர்ஹிட். ஆனால், அதன் இரண்டாம் பாகத்துக்கு ஏன் பதினான்கு வருட காத்திருப்பு? காரணம், படத்தின் இயக்குநர் பிராட் பேர்ட்.

பிராட் பேர்டின் இயற்பெயர் பிலிப் பிராட்லி. 11 வயதாக இருக்கையில் சுற்றுலாவுக்காக பிராட் டிஸ்னி ஸ்டுடியோ செல்கிறார். அதனை பார்ப்பவர், அந்தகணமே ஒரு முடிவெடுக்கிறார். வளர்ந்தால் டிஸ்னி ஸ்டுடியோவில்தான் வேலை செய்வேன் என்று. வீடு திரும்பிய பிராட் அப்போதே 15 நிமிடம் ஓடக்கூடிய அனிமேஷன் குறும்படம் எடுக்கும் வேலையில் இறங்குகிறார். இரண்டு வருடங்கள் செலவளித்து அந்த குறும்படத்தை நிறைவு செய்கிறார். அனிமேஷனில் ஆரம்பகாலத்திலேயே இவ்வளவு ஆர்வம் கொண்ட பிராட் எங்கு வந்து சேர்ந்திருப்பார் என்று யூகிப்பதில் சிரமம் இருக்காது.

பிராட் பேர்டின் முதல் படம், ’தி அயன் ஜெயண்ட்’. அனிமேஷன் படமான இது சுமாராகவே போனது. அதனைத் தொடர்ந்து 2004 இல் ’தி இன்கிரிடிபிள்ஸ்’ படத்தை இயக்கினார் படம் பம்பர் ஹிட். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போயின.

பாப் என்ற சூப்பர் ஹீரோவின் பெயர்தான் இன்கிரிடிபிள். அவரது மனைவி ஹெலன். அவரும் ஒரு சூப்பர் பவர் உள்ள பெண்மணி. நாட்டில் நடக்கும் குற்றங்களை தடுப்பதை கணவனும், மனைவியும் தினசரி வேலையாக செய்கிறார்கள். 15 வருட சூப்பர் ஹீரோ வேலைகளுக்குப் பிறகு தங்களின் சூப்பர் ஹீரோ இமேஜை மறைத்து வாழ ஆரம்பிக்கிறார்கள். வயலட் என்ற மகளும், டேஷ் என்ற மகனும், ஜேக் என்ற கைக்குழந்தையும் அவர்களுக்கு இருக்கிறார்கள். இந்த குழந்தைகளுக்கும் சூப்பர்பவர் உள்ளது.

அமைதியாக நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கையில் தீவு ஒன்றில் வசிக்கும் பயங்கராவத நபரை அழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது. பாப், ஹெலனுடன் அவர்களது மகள் வயலெட்டும், மகன் டேஷும் இந்த ஆபரேஷனில் கலந்து கொள்கிறார்கள். பாப் அதிபராக்கிரமசாலி. ஹெலன் ரப்பராக உடம்பை நீட்டித்துக் கொள்ளும் திறன் படைத்தவர். வயலெட் தன்னைச் சுற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொள்வதில் வல்லவள். டேஷ் அதிபயங்கர வேகத்தில் தண்ணீருக்கு மேலும்கூட ஓடக்கூடியவன்.

முதல் பாகத்தில் வந்த இவர்களே இரண்டாம் பாகத்திலும் இடம் பிடித்திருக்கிறார்கள். ஜுன் 15 யுஎஸ்ஸில் வெளியான இரண்டாம் பாகம் மூன்றே தினங்களில் 182 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. வரும் 22 இந்தியா, சைனா உள்பட முக்கியமான வெளிநாடுகளில் வெளியாகிறது. அனாயாசமாக படம் ஒரு பில்லியனை தாண்டும். இரண்டு பில்லியனை தாண்டுமா என்பதே தயாரிப்பு நிறுவனத்தின் எதிர்பார்ப்பு. குழந்தைகளுடன் செல்ல ஏற்ற திரைப்படம்.

பிராட் பேர்டை பற்றி இன்னும் ஒன்று சொல்ல வேண்டும். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருசேர கவர்ந்த ரேட்டட்டோலி அனிமேஷன் படத்தையும் இவரே இயக்கியிருந்தார். அனிமேஷன் மட்டுமில்லை, அடிதடியிலும் இவர் மாஸ்டர். டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் – கோஸ்ட் புரோட்டகாலின் இயக்குநரும் இவரே.

இந்த வார இறுதியை குழந்தைகளுடன் செலவிட இன்கிரிடிபிள்ஸ் 2 நல்ல தேர்வாக இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close