பிக் பாஸ் நிகழ்ச்சி நூறாவது நாள் நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது. இதில் யார் பட்டம் வெல்லப்போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது. அதே நேரத்தில் இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பும் வெளியாகிறது. இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவிக்கிறார்கள்.
விஜய் டிவியில் 15 பிரபலங்கள் தனியாக ஒரு வீட்டில் நூறு நாட்கள் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 15 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், இறுதிகட்டத்தில் 4 பேர் மட்டுமே அந்த வீட்டில் உள்ளனர். கவிஞர் சினேகன், ஆரவ், நடிகர் கணேஷ், நடிகர் ஹரிஷ் ஆகியோரில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை இன்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த வீட்டில் சினேகன், கணேஷ், ஆரவ் ஆகியோர் நூறு நாட்கள் வீட்டில் இருந்துள்ளனர். ஹரிஷ் பாதியில் வீட்டுக்குள் வந்தவர். பிக் பாஸ் வீட்டில் இதுவரை இருந்தவர்களில் நடிகை ஓவியாவுக்கு கிடைத்த பிரபரலம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பான விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்தியன் 2 படம் தொடர்பான அறிவிப்பை அவர்கள் மூவரும் இணைந்து வெளியிட்டனர்.
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படத்தில் கமலுக்கு இரண்டு வேடம். அப்பா கமல் இந்தியன் தாத்தாவாகவும், மகன் கமல் பிரேக் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தார்கள்.
மகன் லஞ்சம் கொடுத்து பிரேக் இன்ஸ்பெக்டர் பதவியை பெற்றிருப்பார். இந்தியன் தாத்தா ஊழலுக்கு எதிராக போராடி வருபவர். மகன் அனுமதி கொடுத்த பள்ளி பேருந்து விபத்தில் சிக்கி குழந்தைகள் இறந்து போவார்கள். மகன் என்றும் பாராமல் ஊழல் செய்த மகனை, இந்தியன் தாத்தா கொன்றுவிடுவார். விமான விபத்தில் அவர் இறந்துவிட்டதாக போலீஸ் கருதும், ஆனால் அவர் உயிருடன் இருப்பது போல் காட்டியிருப்பார்கள். 21 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தமிழக அரசின் ஊழல் குறித்து பேசி, அதுவே சர்ச்சையானது. அவருக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் விமர்சனத்தை முன் வைத்தனர். இதையடுத்து கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். விஸ்வரூபம், சபாஷ் நாயுடு ஆகிய படங்களை முடித்துவிட்டு, கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பை வெளியிடப் போவதாக பேட்டிகளில் சொல்லி வருகிறார்.
இந்தியன் படமும் ஊழலுக்கு எதிரான படம். அதன் இரண்டாம் பாகமும் ஊழலுக்கு எதிராகத்தான் இருக்கும். அது கமலின் அரசியல் நுழைவுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று சங்கருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் அரசியல் கட்சிக் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு, அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.