இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும், தற்போது அரசியல் பிரமுகராகவும் வலம் வரும் நடிகை ஜெயபிரதா, தான் முதன் முதலில் நடித்த படத்திற்கு சம்பளமாக வெறும் ரூ.10 மட்டுமே பெற்றதாக கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடிகை ஜெயபிரதாவின் உண்மையான பெயர் லலிதா ராணி ராவ். ஆந்திராவின் ராஜமுந்திரியில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை கிருஷ்ணா ராவ் ஒரு தெலுங்கு திரைப்பட நிதியாளராக இருந்தார், மேலும் அவரது தாயார் நீலவாணி ஒரு இல்லத்தரசி. அவர் சிறு வயதிலிருந்தே நடனம் மற்றும் இசையில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த ஜெயபிரதா, இரண்டிலும் சிறப்பான பயிற்சி பெற்று தேறியிருந்தார்.
தனது டீன் ஏஜ் பருவத்தில், தனது பள்ளியின் ஆண்டு விழாவில் ஜெயபிரதா நடனமாடியதை பார்த்த, அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஒரு திரைப்பட இயக்குனர், அவரது நடனத்தால், ஈர்க்கப்பட்டு, தெலுங்கு திரைப்படமான பூமி கோசம் (1974) என்ற படத்தில் மூன்று நிமிட காட்சியில் நடனமாட அவருக்கு வாய்ப்பை வழங்கினார். ஆரம்பத்தில் தயங்கிய ஜெயபிரதா தனது பெற்றோரின் ஊக்கத்திற்கு ஒப்புக்கொண்டார். அந்த காட்சிக்காக அவர் வாங்கிய முதல் சம்பளம் வெறும் ரூ.10 மட்டுமே..
அடுத்து, முக்கிய தெலுங்கு திரைப்பட தயாரிப்புகளில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. கே. பாலசந்தர் இயக்கிய மன்மத லீலை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக ஜெயபிரதாவுக்கு, அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாததால், முதன்மையாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடித்த நினைவுத்தாலே இனிக்கும் மற்றும் 47 நாட்கள் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார்.
சர்கம் மூலம் இந்தி திரைப்படத்தில் அறிமுகமான ஜெயபிரதா ஆரம்பத்தில் இந்தி சினிமாவில் நடிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டாலும், இறுதியில் அவர் ஒரு முழு அளவிலான இந்தி திரைப்பட நடிகையானார். 80களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்த ஜெயபிரதா, தற்போது 62 வயதாககும் நிலையில், திரைப்படங்களில் கணிசமான முக்கிய கேரக்டாகளில் நடித்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் என்ற படத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
நடிப்பு மட்டுமல்லாமல், தற்போது முன்னணி அரசியல்வாதியாகவும் இருக்கும் ஜெயபிரதா, பாரதிய ஜனதா கட்சியில் தற்போது அங்கம் வகித்து வருகிறார். இதற்கு முன்பாக, தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து மக்களுக்கு சேவை செய்தார் ஜெயபிரதா. 1986 ஆம் ஆண்டில், சந்திராவை மணந்து இரண்டு குழந்தைகளைப் பெற்ற தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நஹாதாவை மணந்தார். இந்த திருமணம் சர்ச்சையைத் தூண்டியது.
அரசியலில் சர்ச்சைக்குரிய நபரான ஜெயபிரதா, இப்போது குணச்சித்திர வேடங்களுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார். தனது முதல் படத்திற்கு ரூ10 ரூபாய் சம்பளம் வாங்கிய அவர், ஐந்து படங்களை முடித்த பிறகு லட்சக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.