முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையமான ஐஸ்வர்யா ராய் சென்ற காரின் பின்பக்கம், அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அமிதாப் பச்சன் வீட்டு பவுன்சர்கள் பேருந்து ஓட்டுநரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர், தமிழில் இருவர், ஜீன்ஸ் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் 2- பாகங்களிலும் 2 கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாத ஐஸ்வர்யா ராய், தனது மகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராயக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று அமிதாப் பச்சன் வீட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து காரின் பின்பகுதியில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் காரின் பின்புறம் சிறிது பாதிக்கப்பட்ட நிலையில், காரில் ஐஸ்வர்யா ராய் பயணிக்கவில்லை. அவரது டிரைவர் தான் பயணித்தார் என்று கூறப்படுகிறது. இதனிடையே விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த ஒரு பங்களாவில் இருந்து வந்த பவுன்சர்கள், பேருந்து ஓட்டுரை தாக்கியுள்ளனர். இது குறித்து பேருந்து ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர்.
அதன்பிறகு, பவுன்சர்கள், பேருந்து ஓட்டுனர் இடையே சமாதானம் ஆன நிலையில், இந்த சம்பவம் தொடர்பான புகார் மற்றும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த விபத்து தொடர்பான வீடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பதிவு எண் '5050' என்ற கார், ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் என்பதும் விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால், ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.