சென்சார் சான்றிதழ் கொடுக்க தாமதமானதால், பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட எமர்ஜென்சி படத்திற்கு தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறியுள்ள பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், பா.ஜ.க எம்.பியுமான கங்கனா ரனாவத், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் கங்கனா ரனாவத். நடிகை, தயாரிப்பாளர் என இருந்த இவர், இணை இயக்குனராக சில படங்களில் பணியாற்றிய நிலையில், தற்போது எமர்ஜென்சி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா நடித்துள்ள நிலையில், அனுபம்கெர், வைசாக் நாயர், மகிமா சௌத்ரி, ஸ்ரேயாஸ் தல்பாடி, சதீஷ் கௌசிக், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸூடன் இணைந்து மணிகர்னிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம், கடந்த ஜூன் 14-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு வெளியீடு தேதி மாற்றப்பட்டது.
இதனையத்து செப்டம்பர் 6-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்திற்கு, எதிராக பலர் கருத்து தெரிவித்து வந்ததால்,, மத்திய தணிக்கைத்துறை படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்துள்ளது. இதனால் எமர்ஜென்சி திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இது குறித்து கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், எமர்ஜென்சி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம், விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் நீண்ட காலமாக இழுபறியில் இருந்த சென்சார் சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளதால், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“