பாயல் கபாடியாவின் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘’ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் 30 ஆண்டுகளுக்கு பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்மை போட்டி பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பிரபல மலையாள நடிகை கனி குஸ்ருதி நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘’ஆல் வி இமேஜின் அஸ் லைட்” மும்பையை சேர்ந்த பிரபல இயக்குனர் பாயல் கபாடியா இயக்கியுள்ள இந்த படத்தில், திவ்யா பிரபா, சாயா கடம், ஹிர்து ஹரோன் ஆகியோர் நடித்துள்ளனர். நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கிய தக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்த ஹிர்து ஹரோன், விஜய் சேதுபதி இந்தியில் நடித்த மும்பைக்கார் படத்திலும் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தில் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகை கனி குஸ்ருதி மலையாளத்தில் வெளியாகி சர்ச்சையையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்த பிரியாணி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே வரும் மே 25-ந் தேதி கேன்ஸ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த முறை முதன்மை போட்டிப்பிரிவில் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படம் இடம் பெற்றுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உலகளவில் பிரபலமான பெரும் இயக்குனர்களாக வரும் பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படங்களுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“