Advertisment

திரையுலகை உலுக்கிய திரைநட்சத்திரங்களின் கைதுகள்!

கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் அவருக்கு பணியவில்லை. அவர்களுக்குள் தகராறு இருந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திரையுலகை உலுக்கிய திரைநட்சத்திரங்களின் கைதுகள்!

பாபு

Advertisment

சல்மான் கான்

நடிகர் சல்மான் கானுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 1998 வருடம் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்ற சல்மான் கான், அரியவகை கலைமானை வேட்டையாடிய வழக்கில் இந்த தீர்ப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருக்கிறது. கார் மோதி நடைபாதைவாசியை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே சிறைக்குச் சென்றிருக்கிறார் சல்மான். ஆனால் மான் வேட்டை விஷயத்தில் சல்மான் சிறைக்கு சென்றிருப்பதற்கு அங்குள்ள பழங்குடி மக்களின் பணத்துக்கு மயங்காத உறுதியே காரணம்.

சல்மான் கான் ரேஸ் 3 உள்பட மூன்று படங்களில் நடிப்பதாக இருந்தார். ஐந்து வருட சிறைத்தண்டனை மூன்று படங்களின் கதி என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சமீபமாக சல்மானின் படங்கள் இந்தியாவில் அனாயாசமாக 200 கோடிகளைத் தாண்டுவதால் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி வசூலை பாலிவுட் இழக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சஞ்சய் தத்

அதிக புகழ், அதிக பணம், அதிக சுதந்திரம்... இந்த மூன்றும் கட்டுப்பாடில்லாத இளைஞனை எந்த எல்லைக்கு நகர்த்தும் என்பதற்கு உதாரணம் சஞ்சய் தத். சட்டவிரோதமாக ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததற்காக சஞ்சய் தத் மீது வழக்கு பாய்ந்தது. தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது புனேயில் உள்ள யார்வாடா சிறையில் இருக்கிறார் சஞ்சய் தத்.

சைஃப் அலிகான்

தனது மனைவி கரீனா கபூர், அவரது சகோதரி கரீஷ்மா கபூர் ஆகியோருடன் நட்சத்திர விடுதிக்கு வந்த சைஃப் அலிகான் அங்கு வந்த நபருடன் சண்டையிழுத்து போட்டுத்தாக்கியதில் கைது செய்யப்பட்டார். குடும்பத்துடன் வந்து கும்மாங்குத்து போட்டதில் பாலிவுட் அதிர்ந்துதான் போனது.

மோனிகா பேடி

சேரும் இடம் சரியில்லையென்றால் போகுமிடம் சிறையாகவே இருக்கும். மோனிகா பேடி சிறந்த உதாரணம். சினிமாவில் டாப்பில் வரவேண்டியவர் தாதா அபு சலீமின் நட்பால் சீரழிந்தார். போலி பாஸ்போர்டுடன் போர்ச்சுகலில் கைது செய்யப்பட்ட மோனிகா பேடிக்கு கடைசியில் கிடைத்தது கெட்டப் பெயரும், சிறைவாசமும்.

ஷைனி அகுஜா

அகுஜாவின் வேலைக்கார பெண்மணி சொன்ன புகாரைக் கேட்டு திரையுலகமே அதிர்ந்தது. அகுஜா என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்பதே புகார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏழு வருட சிறைத்தண்டனை விதித்தது. அகுஜாவின் பெயர், புகழ் அனைத்தும் ஒரே நாளில் காணாமல் போனது.

ஜான் ஆபிரஹாம்

ஜான் ஆபிஹாம் ஒரு பைக் ப்ரியர். நட்சத்திரங்கள் காருக்குப் பின்னால் ஓடுகையில் பைக்கிற்குப் பின்னால் அலைந்தவர். 2006 இல் பைக்கை ஹை ஸ்பீடில் ஓட்டி இரண்டு பேரை விபத்துக்குள்ளாக்கின வழக்கில் ஜான் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

ஃபர்தீன் கான்

அடுத்த சல்மான், ஷாருக்கான் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர். 1998 இல் முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றவர். கோகெய்ன் வாங்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஃபர்தீனுக்கு ஐந்து நாள்களுக்குப் பிறகே பெயில் கிடைத்தது.

அன்கிட் திவாரி

நடிகர்கள் மட்டுமில்லை, பாடகர்களும் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். இளம் பாடகர் திவாரி தனது தோழியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2015 இல் சிறைக்கு சென்றார்.

திலீப்

மேலே உள்ளவர்கள் இந்திப் படவுலகைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் மலையாள நடிகர் திலீப் நடிகை கடத்தி பாலியல் சீண்டலுக்கு உள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாத சிறைவாசத்துக்குப் பிறகு பலமுறை பெயில் மறுக்கப்பட்ட பிறகு சமீபத்தில்தான் வெளியே வந்தார். ஆச்சரியமாக தன்மீதான விமர்சனங்களை கடந்து இயல்பு வாழ்க்கைக்கும் சினிமா வாழக்கைக்கும் திலீப் திரும்பியிருக்கிறார். வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு திலீப் குற்றவாளி என்றால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிவரும் இந்த பவர்ஃபுல் மலையாள நடிகர்.

கலைவாணர் மற்றும் தியாகராஜ பாகவதர்

சிறைக்குப்போன நட்சத்திரங்கள் குறித்த பட்டியலை எடுத்தால் ஒரு புத்தகமே போடலாம். ஆனால் அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரை முற்றிலுமாக விழுங்கிய வழக்கு அது.

தியாகராஜ பாகவதர் தனது குரலாலும் தோள்வரை புரளும் சிகையாலும் தமிழர்களிடையே கடவுளாக பார்க்கப்பட்டுவந்த நேரம். 1944 இல் லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், கலைவாணர் உள்பட பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். அதில் கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் குற்றவாளிகள் என தீர்ப்பானது. சிறையில் இருவரும் தள்ளப்பட்டனர்.

லட்சுமிகாந்தனை ஏன் யாரோ கொலை செய்ய வேண்டும்? லட்சுமிகாந்தன் அன்றைய திரையுலகை தனது எழுத்துமுனையில் மிரட்டிய பத்திரிகையாளர். ஆனால் மஞ்சள் எழுத்து. கிசுகிசுக்களின் பிதாமகர். அவரது இந்து நேசன் பத்திரிகை மஞ்சள் பத்திரிகையின் அத்தனை குணநலன்களையும் கொண்டிருந்தது. அவரது பேனாவில் மாட்டாத பிரபலங்கங்களின் அந்தரங்கங்கள் இல்லை. அவருக்கு பயந்து பணத்தை இறைத்த திரையுலகினர் பலர். கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் அவருக்கு பணியவில்லை. அவர்களுக்குள் தகராறு இருந்தது. இறக்கும் தருவாயில் லட்சுமிகாந்தன் இவ்விருவரின் பெயர்களை குறிப்பிட்டதால் கொலைக்குப் பின்னால் இவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 1944 முதல் 1947வரை வழக்கு நடத்தியதில் கலைவாணர், பாகவதர் இருவரது சொத்துக்களும் காலியாயின. இந்த காலகட்டத்தில்தான் பாகவதரின் ஹரிதாஸ் மூன்று தீபாவளிகளைக் கடந்து சென்னை சன் திரையரங்கில் ஓடியது.

கடைசியில் 1947 இல் கலைவாணரும், பாகவதரும் குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். அப்போது இருவரும் ஏறக்குறைய ஒட்டாண்டியாயிருந்தனர். பாகவதரால் அந்த அடியிலிருந்து மீள முடியவில்லை. ஒருகாலத்தில் கடவுளாக கொண்டாடப்பட்டவர், ரசிகர்களால் அடையாளம் கண்டுகொள்ளப்படாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு மரணமடைந்தார். கலைவாணர் தனது திறமையால் மீண்டெழுந்தாலும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு அவரது வாழ்க்கையையுமே பெருமளவு சேதப்படுத்தியது.

இந்திய திரையுலகு இதுவரை கண்ட வழக்குகளிலேயே இதுதான் இன்றும் மர்மமானதாகவும், தீவிரமானதாகவும் கருதப்படுகிறது.

கலைவாணரும், பாகவதரும் குற்றவாளிகள் இல்லையெனில் லட்சுமிகாந்தனை கொன்றவர்கள் யார்? விடுவிக்கப்படாத இந்த மர்மம் 74 வருடங்களுக்குப் பிறகும் கொலைவாளுக்குரிய பிரகாசத்துடன் ஜெnலித்துக் கொண்டே இருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment