/indian-express-tamil/media/media_files/2025/08/11/jailer-coolie-2025-08-11-16-00-19.jpg)
சினிமாவில் ஒரு படம் வெளியாகி ஹிட்டாகி விட்டால், அடுத்த சில வருடங்களுக்கு பிறகு ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸ் செய்யப்படும். பெரும்பாலும் வெற்றிப்பெற்ற படங்கள் தான் ரீ-ரிலீஸ் செய்யப்படும். ஒரு சில படங்கள் முதலில் ரிலீஸ் ஆகி தோல்வியை சந்திருந்தாலும், ரீ-ரிலீஸில் வெற்றி பெறும் என்று நினைத்து வெளியிடுவார்கள். ஆனால் 1995-ம் ஆண்டு வெளியான மெகாஹிட்டான ஒரு படம் கடந்த 30 ஆண்டுகளில் 550 முறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘ஓம்’ என்ற இந்த படம் ரீ-ரிலீஸில் வெளியாகி சரித்திர சாதனை படைத்துள்ளது. 1995ஆம் ஆண்டு மே 19 அன்று வெளியான 'ஓம்' திரைப்படம், கன்னடத் திரையுலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு சாதாரண காதல் கதையாக இல்லாமல், நிழல் உலகத்தின் இருண்ட பக்கங்களையும், ஒரு நல்லவன் எப்படி ரவுடியான மாறினான், கடைசியில் அவனது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
அந்த காலகட்டத்தில், பெங்களூரின் நிழல் உலகை இவ்வளவு யதார்த்தமாகவும், துணிச்சலுடனும் காட்சிப்படுத்திய முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்தில், நடிகர் சிவராஜ்குமார், கல்லூரி மாணவராக இருந்து பின்னர் ஒரு கேங்ஸ்டராக மாறும் சத்யா கேரக்டரில் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது தீவிரமான நடிப்பு, உணர்ச்சிபூர்வமான காட்சிகள், மற்றும் திரையில் அவர் வெளிப்படுத்திய ஆற்றல், சத்யா என்ற கேரக்டரை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது. இதுவே சிவராஜ்குமார் ஒரு நடிகராக மேலும் உயர வழிவகுத்தது.
நடிகை பிரேமா, நாயகி மாதுரி கேரக்டரில், உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஸ்ரீஷாந்தி மற்றொரு முக்கிய கேரக்டரில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். சந்து கோகிலா நகைச்சுவை மற்றும் அழுத்தமான காட்சிகளில் தனது இருப்பை வெளிப்படுத்த, ஜி.வி.சுதாகர் நாயுடு மற்றும் எம்.எஸ்.உமேஷ் போன்ற நடிகர்கள் நிழல் உலகத்தின் கேரக்டர்கள் யதார்த்தத்தைக் கொடுத்தனர். சுமார் ரூ. 50 லட்சம் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், டாக்டர் ராஜ் பட நிறுவனத்திற்கு அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். ஆனால், இதன் வசூல் வெளியீட்டிற்கு முன்பே ரூ. 2 கோடியைத் தாண்டி, இறுதி வசூல் ரூ. 5 கோடிக்கு மேல் ஈட்டியது.
கன்னட சினிமாவின் ஒரு பெரும் வெற்றிப் படமாக (industry hit) உருவெடுத்த ஓம், ஒரு கல்ட் க்ளாசிக் படமாக இன்றும் நிலைத்திருக்கிறது. மிக முக்கியமாக, இந்தப் படம் இந்திய சினிமாவில் 550க்கும் மேற்பட்ட முறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படம் என்ற ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது., லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. ஒரு திரைப்படம் இத்தனை முறை திரையிடப்பட்டது இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு அபூர்வமான நிகழ்வு. ஓம் திரைப்படம் வெறும் ஒரு வெற்றிகரமான திரைப்படமாக மட்டும் நிற்கவில்லை. இது கன்னடத் திரையுலகிற்கு ஒரு புதிய பாதையை வகுத்தது.
யதார்த்தமான நிழல் உலகக் கதைகள், புதிய இயக்குநர்களின் துணிச்சலான முயற்சிகள் எனப் பல மாற்றங்களுக்கு இது ஒரு உத்வேகமாக அமைந்தது. இன்றும், ஓம் ஒரு காவியமாகப் பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சிவராஜ்குமார், ரஜினிகாந்துடன் ஜெயிலர், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார், அதேபோல், படத்தை இயக்கியவர் உபேந்திரா. இவர் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள கூலி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.