சீன சந்தையை கைப்பற்றுமா இந்திய சினிமா?

தமிழ் சினிமாவுக்கும் இந்தி சினிமா போல் ஒரு ஜாக்பாட் கடையை சீனா திறந்து வைக்குமா? 2.0 படத்தை சீனாவில் திரையிட இப்போதே வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பாபு

உலகின் மிகப்பெரிய திரைப்பட வர்த்தக சந்தையில் முதலிடத்துக்கு முன்னேறுகிறது சீனா. ஹாலிவுட்டில் தயாராகும் படங்களே இப்போது சீனாவைத்தான் நம்பியுள்ளன.

அதிக திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டாலும் இந்திய திரைப்பட வர்த்தகம் சில எல்லைகளை கொண்டது. பிரதான காரணம் மொழி. தமிழில் தயாராகும் படங்களை தமிழகத்தில் அதிகபட்சம் 350 திரையரங்குகளில் வெளியிடலாம். உச்ச நட்சத்திரத்தின் படம் என்றால் 500 – 550. தெலுங்குப் படங்கள் என்றால் ஆந்திரா, தெலுங்கானாவில் 1000 – 1200 திரையரங்குகள். இந்திப் படங்கள் என்றால் இன்னும் சில நுhறு திரையரங்குகள். காரணம் மொழி.

யுஎஸ் முழுக்க ஆங்கிலம் என்பதால் அங்கு ஒரு திரைப்படத்தை 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். சீனாவிலும் அப்படியே. மொழி, கலாச்சாரத்தைத் தாண்டி தங்களது தொழில்நுட்பம் காரணமாக சீனாவில் மிகப்பெரிய வர்த்தகத்தை ஹாலிவுட் கொண்டிருக்கிறது. செக்சுக்கும், வன்முறைக்கும் மொழியோ எல்லையோ இல்லை. ஹாலிவுட்டின் பலம் வன்முறை மற்றும் பிரமாண்டம். சூப்பர் ஹீரோ படங்களையும், டைனோசர், காட்சிலா, கிங் காங் என்று பிரமாண்டங்களையும் எடுத்துத் தள்ளுகிறார்கள். எண்பதுகளின் பி கிரேட் ஆக்ஷன் ஹீரோக்களின் தி எக்ஸ்பென்டபிள்ஸ் போன்ற படங்கள் சீனாவில் கல்லா கட்டுகின்றன. ஹாலிவுட் படங்களின் மொத்த வசூலில் சில நேரம் ஐம்பது சதவீதம் சீனாவிலிருந்து வருகிறது. சீனாவின் திரையரங்குகளின் எண்ணிக்கை இந்தியாவைப்போல பல மடங்குகள்.

சீனா போன்ற ஒரு சந்தையில் காலூன்ற முடிந்தால் இந்திய திரைப்படங்களின் எல்லைகள் றக்கை விரிக்கும். இந்திப் படங்கள், குறிப்பாக அமீர்கானின் படங்கள் ஏற்கனவே அதனை செய்ய ஆரம்பித்திருப்பதை அறிவோம்.

2009 இல் சீனாவில் அமீர்கானின் 3 இடியட்ஸ் திரைப்படம் வெளியானதே முதல் துவக்கம். இந்தியாவில் 200 கோடிகளை கடந்து அப்படம் வசூல் சாதனை படைத்திருந்தது. சீனாவில் அப்படம் 2.2 மில்லியன் யுஎஸ் டாலர்களை சம்பாதித்தது. கிட்டத்தட்ட 13.5 கோடிகள். 

2013 இல் வெளியான அமீர்கானின் தூம் 3 சுமார் 3 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்தது. அப்போதெல்லாம் சீன வர்த்தகம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. வெல்ல முடியாத மலையாகவே அது காட்சியளித்தது. நடுவில் வெளியான ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர், மை நேம் இஸ் கான் படங்கள் அமீர்கானின் படங்களைவிட மிகக்குறைவாகவே வசூலித்தன.

இந்நிலையில் பிகே திரைப்படம் சீனாவில் வெளியானது. 4000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல்வார இறுதியில் 33.76 கோடிகளை வசூலித்து இன்ப அதிர்ச்சி தந்தது. அடுத்தடுத்த நாள்களில் வசூல் அதிகரித்தது. சுமாராக 16.75 மில்லியன் யுஎஸ் டாலர்களை பிகே சீனாவில் சம்பாதித்தது. நமது ரூபாயில் 100 கோடிகளுக்கும் மேல். 

சீன சந்தையின் விஸ்தீரணம் இதன் பிறகே இந்திய திரையுலகு முழுமையாக அறிந்தது. புற்றீசல்களாக சீனாவை நோக்கி படையெடுத்து எல்லையிலேயே மடக்கப்பட்டனர். சீன அரசு வெளிநாட்டுப் படங்களை திரையிட கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வருடத்துக்கு 34 படங்கள் மட்டுமே அன்று அனுமதிக்கப்பட்டன. அதில் அதிகம் ஹாலிவுட் திரைப்படங்கள். பாகுபலி படம் முட்டி மோதி எப்படியோ சீனாவுக்குள் நுழைந்தது. 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை வெளியிட்டனர். ஆனால், படம் சில கோடிகளை மட்டுமே வசூலித்து ஏமாற்றியது. இந்தியாவில் அடித்து ஆடிய படம் சீனாவில் டக் அவுட்டானதால் சீனா குறித்த இந்திய நம்பிக்கை பொய்த்தது. பிகே எப்படியோ ஓடியது என்ற முடிவுக்கு பெரும்பாலானவர்கள் வந்தனர். 

பாகுபலி 2 வெளிவந்து தங்கல் உள்ளிட்ட இந்திப் படங்களின் வசூல் சாதனைகளை இந்தியாவில் சிதறடித்தது. இந்தியாவுக்கு வெளியேயும் – குறிப்பாக யுஎஸ்ஸில் தங்கலின் சாதனை பாகுபலி 2 படத்தால் முறியடிக்கப்பட்டது. தங்கல் இரண்டாமிடத்துக்கு கீழிறக்கப்பட்டது. இந்நிலையில், தங்கல் சீனாவில் வெளியானது. சீன பாக்ஸ் ஆபிஸ் பிரளயம் கண்டது. 

சீனாவில் தங்கலின், 

முதல்நாள் வசூல் – 14.67 கோடிகள்

இரண்டாவதுநாள் – 30.30 கோடிகள்

மூன்றாவதுநாள் – 35.86 கோடிகள்

நான்காவது நாள் – 37.23 கோடிகள்

வேலை நாள்களிலும் படத்தின் வசூல் குறையவில்லை. படத்தின்,

ஒன்பதாவது நாள் வசூல் – 88.94 கோடிகள்

பதினாறாவது நாள்  – 104.16 கோடிகள்

இருபத்தைந்தாவது நாள்  – 52.05 கோடிகள்

முப்பத்தியொன்றாவது நாள் –  22.71 கோடிகள்

இப்படியொரு வசூல் வேட்டையை இந்தியப்படம் நிகழ்த்தும் என்று சீனா நினைக்கவில்லை. மொத்தமாக சுமார் 1229 கோடிகளை சீனாவில் தங்கல் வசூலித்தது. சீனாவில் நடத்திய சூறாவளியால் மொத்த வசூலில் பாகுபலி 2 படத்தை தங்கல் தோற்கடித்தது.

சீனாவின் இதுவரையான பாக்ஸ் ஆபிஸ் சரித்திரத்தில் தங்கல் 1229 கோடிகளுடன் இருபத்தி நான்காவது இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இருபத்தி மூன்றாவது இடத்தில் 1340 கோடிகளுடன் அவதார் உள்ளது. இதிலிருந்து தங்கல் நிகழ்த்திய சாதனை எத்தகையது என்பது புரிந்திருக்கும்.

இந்தியாவில் வெறும் 63 கோடிகளுக்கு விற்கப்பட்ட, 100 கோடிகள் வசூலிக்க திணறிய அமீர்கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் சீனாவில் 117 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்தது. கிட்டத்தட்ட 700 கோடிகளுக்கும் மேல். இந்த வசூல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. சீனர்களின் மனங்களை இந்தியப் படங்களால் கொள்ளையடிக்க முடியும் என்ற நம்பிக்கை. அதற்கு சூப்பர் ஹீரோ படங்களை பல மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்க வேண்டியதில்லை, உணர்வுப்பூர்வமான நல்ல படங்களே போதும் என்ற நம்பிக்கை. 

சீக்ரெட் சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்குப் பிறகு சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் சீனாவில் வெளியாகி 100 கோடிகளை வசூலித்தது. 

பாகுபலி 2 படத்தை எப்படியாவது சீனர்களின் பிடித்த படமாக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர்கள் தலைகீழாக நின்றதன் பயனாக அப்படம் சீனாவில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பாகுபலி போன்ற பிரமாண்டங்களை அதைவிட துல்லியத்துடன் ஹாலிவுட் படங்களில் சீனர்கள் அனுபவப்பட்டிருக்கிறார்கள். அதிலிருப்பதும் தங்கல் போன்ற படங்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களும் அல்ல. எனினும் பாகுபலியைவிட பாகுபலி 2 சீனாவில் அதிகம் வசூலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிகம் வசூலித்து தங்கலின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது பாகுபலி டீமின் ஆசை. 

மேலே உள்ள புள்ளி விவரங்கள் சீனாவில் இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய வர்த்தக சந்தை உள்ளதை தெளிவுப்படுத்துகிறது. ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து நுட்பமான உணர்வுகளுடன் எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் இதனை உறுதி செய்திருப்பது இன்னும் ஆரோக்கியமானது. தமிழ் சினிமாவுக்கும் இந்தி சினிமா போல் ஒரு ஜாக்பாட் கடையை சீனா திறந்து வைக்குமா? 2.0 படத்தை சீனாவில் திரையிட இப்போதே வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அப்படம் சீனாவில் வெளியானால் சீனாவின் திரைப்பட வர்த்தகம் நமக்கு சாதகமாக அமையுமா என்ற கேள்விக்கு இன்னும் துல்லியமான விடை கிடைக்கும். முக்கியமாக சீனாவில் கிடைத்திருப்பது அமீர் கானின் வெற்றியா இல்லை இந்திய சினிமாவின் வெற்றியா என்பது தெரியவரும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close