இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதை வென்று பெருமை சேர்த்த நிலையில், தற்போது இங்கிலாந்து இசைப்பள்ளி அவருக்கு பெரிய கவுரவத்தை அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது உலகம் போற்றும் முக்கின இசை கலைஞராக உருவெடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தனது முதல் படமான ரோஜா படத்திற்கு தேசிய விருதை வென்றார். ஸ்லாம்டாக் மில்லியனர் படத்திற்காக சினிமா துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாக இருக்கும் ஆஸ்கார் விருதை வென்று அசத்திய இவர், தமிழ் மலையாளம், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், அரபி ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இசை தொடர்பான படங்களை தயாரித்தும், கதையும் எழுதி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது விருதுகளை குவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், ஆடு ஜீவிதம் படத்திற்காக உலக சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதை வென்ற, ஏ.ஆர்.ரஹ்மான், ஆடுஜீவிதம் படத்திற்காக மீண்டும் ஆஸ்கார் ரேஸில் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் அவர் 3-வது முறையாக ஆஸ்கார் விருது வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் நிலையில், தற்போது லண்டனில் இசை நாடகம் மற்றும் சமகால நடனத்திற்கான கன்சர்வேட்டரியான டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் அவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிரினிட்டி லாபன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2008ம் ஆண்டு அவர் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவியதில் இருந்து ஏ.ஆர். ரகுமானுடனான எங்கள் ஒத்துழைப்பு, தொடர்கிறது. இந்த ஆண்டு, டிரினிட்டி லாபன் முறைப்படி கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் கேஎம்எம்சி, மாணவர்கள் தங்கள் படிப்பை சென்னைக்கும் லண்டனுக்கும் இடையில் இணைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. எல்லைகளைத் தாண்டி கருத்துக்கள் மற்றும் மரபுகளின் பரிமாற்றத்தை வளர்க்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“