தற்போதைய டிஜிட்டல் காலத்தில் நடிகர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதில் பழம்பெரும் நடிகைகளும் தங்களது பதிவுகளை வெளியிட தவறவில்லை. அந்த வகையில் இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கிளாசிக்கல் நடனத்தில் மிகவும் திறமையான நடிகையாக இவர், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா உட்பட பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை பழம்பெரும் நடிகை ஜெயபிரதா தான். தனது 13-வயதில், 1974 –ம் ஆண்டு பூமிகோசம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான இவருக்கு முதல் சம்பளம் வெறும் 10 ரூபாய் தான்.
அதன்பிறகு 1976-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதலீலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட் சினிமாவில் நுழைந்து பல வெற்றிகளை கொடுத்த ஜெயபிரதா, தனது நடிப்பு மற்றும் நடன திறமை காரணமாக, குறுகியாக காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார். பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ராகேஷ் ரோஷன் மற்றும் ஜிதேந்திரா போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜெயபிரதா நடித்துள்ளார்.
ஜிதேந்திராவுடன் அவர் ஜோடி சேர்ந்தது பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி என்று அழைக்கப்பட்ட நிலையில், இருவரும் இணைந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளனர். அதேபோல் தனது சிறப்பான நடிப்பிற்காக ஜெயபிரதா பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் தனது ராஜ்ஜியத்தை பெரிதாக வளர்த்துக்கொண்டாலும், ஜெயப்பிரதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல சர்ச்சைகளை கடந்தது. ஏற்கனவே 3 குழந்தைகளுக்கு அப்பாவான ஸ்ரீகாந்த் நஹாதாவை 1986-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
ஸ்ரீகாந்த் நஹதா ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஜெயபிரதா படப்பிடிப்பின் போது அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. ஜெயபிரதாவை திருமணம் செய்த பிறகும் ஸ்ரீகாந்த் நஹாட்டா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. திருமணமான பிறகும் ஜெயபிரதா இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் அவருக்கு திருமணமாகிவிட்டதால், தயாரிப்பாளர்கள் அவரை ஓரங்கட்டத் தொடங்கினர். இது அவரது சினிமா வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
மறுபுறம், ஸ்ரீகாந்த் நஹாட்டா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாததால் ஜெயபிரதா அவரது வீட்டில் வசிக்க முடியவில்லை, இது அவரது திருமணமும் முறிவதற்கு வழிவகுத்தது. இந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள நடிகை ஜெயபிரதா, தமிழில் மன்மதலீலை படத்திற்கு பிறகு, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி, தசவதாரம், கேணி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.