இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக திகழ்ந்த வாணி ஜெயராம் இன்று காலை திடீரென தனது வீட்டின் படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் வாணி ஜெயராமின் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து வாணி ஜெயராமின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியபின் நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதனிடையே வாணி ஜெயராமின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ” திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இசை உலகில் வாணி ஜெயராமின் பாரம்பரியம் என்றென்றும் நிலைத்திருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கலைவாணி வாணி ஜெயராமின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். வாணி ஜெயராமின் உயிரிழப்பு, இசையுலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பத்ம பூஷன் விருதை பெறும் முன்னரே வாணி ஜெயராம் மறைந்திருப்பது, பெரும் துயரம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், பழம்பெரும் பின்னணி பாடகி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவரது ரசிகர் பெருமக்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், நீங்கள் எனக்குப் பாடிய முதல் பாடலையே இறுதி அஞ்சலியாய்ச் செலுத்துகிறேன் “மேகமே மேகமே பால்நிலா தேய்ந்ததே தேகமே தேயினும் தேனொளி வீசுதே உனக்கொரு மலர்மாலை நான் வாங்க வேண்டும் அது இதற்கோ?” என கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், வசீகரிக்கும் குரலால் தமிழர்களின் மனதைக் கட்டிப் போட்ட பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடித்த திரைப்படங்களில் பாடி சிறப்பு சேர்த்தவர். அண்மையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில், திரைப்பட பின்னணி இசைப்பாடகி, மூன்று முறை தேசிய விருதை பெற்றவர், பத்ம பூஷன் திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், 19 மொழிகளில் சுமார் ஆயிரம் படங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, தமிழ் திரையுலகில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளில் முன்னோடியாக திகழ்ந்த பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், இசைத் துறையில் தன்னிகரற்ற இடம் பதித்த சிறந்த பின்னணி பாடகியும், மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு தேர்வான வாணிஜெயராம் அவர்கள் மறைவு செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பதிவில், திரைப்பட பின்னனிபாடகி திருமதி. வாணிஜெயராம் அவர்கள் மூன்று தலைமுறையாக திரைப்பபாடல்கள், பக்திப்பாடல்கள் என்று காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களை பாடியவர். அவர்களின் இழப்பு, இசைத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும் என கூறியுள்ளார்.
“இப்பதான் உயரிய விருது பத்மபூஷன் அறிவிச்சாங்க.. அதை வாங்குவதற்குள் இப்படி ஆகிடுச்சு…” என பாடகி வாணி ஜெயராம் மறைவு குறித்து இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil