இந்தோ - பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் 3 விருதுகளை பெற்றுள்ளது. நடிகை தமன்னாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை தமன்னா ஆகியோர் நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் 2019-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். உதயநிதி நடித்த கண்ணே கலைமானே திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறாவிட்டாலும், கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், இந்தோ- பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் படம் 3 விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை நடிகை தமன்னாவும், சிறந்த தயாரிப்பாளராக உதயநிதியும் சிறந்த துணை நடிகையாக வடிவுக்கரசியும் விருது பெற்றுள்ளனர். மொத்தத்தில், உதயநிதி தயாரித்து நடித்த கண்ணே கலைமானே திரைப்படம் இந்தோ - பிரெஞ்சு திரைப்பட விழாவில் 3 விருதுகளைப் பெற்று கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் உதயநிதி, தமன்னா, சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாமன்னன்’ படத்தோடு சினிமாவில் இருந்து விடைபெறும் நடிகர் உதயநிதிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில், “தங்களின் சினிமாத்துறை விடைபெறுதலுக்கு எப்படி வாழ்த்து தெரிவிப்பது எனத் தெரியவில்லை, #நீர்ப்பறவை #கண்ணேகலைமானே என்று இன்றும் நாட்டுக்குள் இருக்கும் வீட்டுமக்களாலும், புதிய தலைமுறை இளைஞர்களாலும் கவனிக்கப்படும் திரைப்படங்களை இயக்க வாய்ப்புகள் தந்து, என் இனிய நினைவுகளுக்கு அன்பும் தந்த தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்” என பதிவிட்டிருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"