IPhone News In Tamil: செப்டம்பர் மாதம் வந்தாலே, ஆப்பிள் ஐபோன் பிரியர்களுக்கு உற்சாகமான மாதம் தான், ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடும். ஆனால், இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, புதிய ஐபோன்களின் வரவு, இன்னும் சில வாரங்கள் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 அறிமுகம் ஆக ஒரு மாதத்திற்கும் மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டில் புதிதாக 4 ஐபோன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஐபோன் 12ல் 3டி ரெண்டர்ஸ், போட்டோஸ் என மனங்கவரும் பல அம்சங்கள் நிறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 புதிய ஐபோன் 12 மாடல்கள்
ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டு 4 புதிய ஐபோன் 12 மாடல்களை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 5.4 இஞ்ச் ஐபோன் 12, 6.1 இஞ்ச் ஐபோன் 12 மேக்ஸ், 6.1 இஞ்ச் ஐபோன் 12 புரோ மற்றும் 6.7 இஞ்ச் ஐபோன் 12 புரோ மேக்ஸ் என 4 ஐபோன்கள் வெளியாக உள்ளன. இவற்றில், ஐபோன் 12 மற்றும் மேக்ஸ் வகை பிரீமியம் மிட் ரேஞ்ச் மாடல்கள் என்றும், ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் போன்கள் பிளாக்ஷிப் டிவைஸ்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 4 புதிய போன்களும் ஓலெட் டிஸ்பிளே மற்றும் 5ஜி சப்போர்ட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கண்கவர் டிசைன்
டிசைனை பொறுத்தவரையில், 2010ம் ஆண்டில் வெளியான ஐபோன் 4 டிசைனை ஒத்தவகையிலேயே, 2020ம் ஆண்டின் புதிய ஐபோன்கள் இருக்கும். இவைகள், ஐபாட் புரோவை ஒத்தும் இருக்கும் என்று ஒருசாரார் தெரிவித்துள்ளனர். அலுமினியம் பிரேம், புரோ மாடல் போன்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனதாக இருக்கும்.
மேம்படுத்தப்பட்ட கேமராக்கள்
போட்டோ பிரியர்களுக்கு உன்னத அனுபவத்தை அளிக்கும் வகையில், புதிய ஐபோன்களில் கேமராக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஐபோன் 12 மற்றும் மேக்ஸ் மாடல்களில் இரண்டு கேமராக்களும், மற்ற மாடல்களில் 3 கேமராக்கள் இருக்கும். 4 புதிய ஐபோன்கள் மாடல்களிலும், பெரிய கேமரா சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. LiDAR என்று பெயரிடப்பட்ட அந்த சென்சாரை கொண்டு, அறையில் பொருட்கள் இருக்கும் தொலைவை கணக்கிட முடியும். இந்த வசதி புரோ மாடல்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், ஹை எண்ட் ஐபாட் புரோ மாடல்களில் இந்த வசதி ஏற்கனவே உள்ளது.
ஏ 14 புராசசர்
ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 4 புதிய ஐபோன்களிலும் லேட்டஸ்ட் புராசசரான ஏ 14 பயோனிக் புராசசர் உள்ளது. இதுமட்டுமல்லாது, பட்ஜெட் மாடல் போன்கள் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. டாப் எண்ட் மாடல்கள், 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விலை எவ்வளவு?
நமக்கு வந்த தகவல்களின்படி, ஐபோன் 12 ன்விலை 649 டாலர்களில் இருந்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் 11 விட 50 டாலர்கள் குறைவு ஆகும். ஐபோன் 12 மேக்ஸ் 749 டாலர்களிலிருந்தும், ஐபோன் 12 புரோ 999 டாலர்களிலிருந்தும், ஐபோன் புரோ மேக்ஸ் 1,099 டாலர்களிலிருந்தும் துவங்குவதாக பிசினஸ் இன்சைடர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போன்கள் அனைத்தும் 5 ஜி சப்போர்ட் செய்யும் வகையில் உள்ளது. இதைதவிர்த்து, 4ஜி சப்போர்ட் செய்யும் ஐபோனும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அதன் விலை 549 டாலர்களிலிருந்து துவங்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.