Advertisment
Presenting Partner
Desktop GIF

Iraivan Review: ஜெயம் ரவி சூப்பர்; நயன்தாரா ஐயோ பாவம்... இறைவன் தேறியதா?

அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகி இருக்கும் "இறைவன்" படம் மக்களை கவர்ந்ததா ? என்ற முழு விமர்சனத்தை காணலாம்.

author-image
WebDesk
New Update
திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்

அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சைக்கோ திரில்லர் படமாக உருவாகி இருக்கும் "இறைவன்" படம் மக்களை கவர்ந்ததா ? என்ற முழு விமர்சனத்தை காணலாம்.

Advertisment

கதைக்களம் :

அர்ஜுனும் (ஜெயம் ரவி), ஆண்ட்ரூவும் (நரேன்) காவல் துறையில் உதவி ஆணையர்களாக  பணியாற்றி வருகின்றனர். இரவில் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்த கொலையாளியை ( ராகுல் போஸ்)பிடிக்கும் பொறுப்பு அர்ஜுனுக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் சைக்கோ கொலையாளியை பிடிக்க, அந்த சண்டையில் ஆண்ட்ரூ இறந்து விடுகிறார். இதனால் போலீஸ் வேலையே வேண்டாம் என்று உதறிவிட்டு ஒரு சராசரி வாழ்க்கை வாழ்கிறார் அர்ஜுன். ஆனால் போலீஸிடம் இருந்து தப்பித்த சைக்கோ அர்ஜுனை பழிவாங்க துடிக்கிறார். இதிலிருந்து அர்ஜுன் தப்பித்தாரா ? மீண்டும் அந்த கொலையாளி பிடிபட்டரா?  இந்த கொலைகள் ஏன் நடந்தது? என்பதே மீதி கதை.

நடிகர்களின் நடிப்பு :

துளியும் பயம் இல்லாத ஒரு போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி உடல் மொழியிலும், முக பாவனைகளிலும் அவருடைய கம்பீரம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. போலீஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தும் ஒரு சில தமிழ் ஹீரோக்களில் ஜெயம் ரவி முதன்மையானவர் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டி இருக்கிறார். கம்பீரம் மட்டுமல்லாமல் தன் நண்பனுக்காக ஏங்கும் இடங்களிலும், நண்பனின் குடும்பத்துக்காக போராடும் இடங்களிலும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜெயம் ரவியின் நண்பராக வரும் நரேனின் கேரக்டர் பெரிய அளவில் இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நயன்தாராவிற்கு நடிப்பதற்கான வேலை  இல்லை என்றாலும் ஆங்காங்கே வந்து போகிறார். வில்லனாக வரும் ராகுல் போஸின்  கதாபாத்திரம் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தன் நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

இயக்கம் மற்றும் இசை :

என்றென்றும் புன்னகை போன்ற ஒரு பீல் குட் படத்தை கொடுத்த இயக்குனர் அஹ்மத் அதுக்கு நேர் எதிரான ஒரு சைக்கோ திரில்லர் கதையை  தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் நாம் நிறைய பார்த்து பழகிய அதே சைக்கோ திரில்லர் பாணியில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் சூப்பர். பின்னணி இசையில் பல இடங்களில் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயன்றிருக்கிறார்.

 படம் எப்படி ?

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு ராவான சைக்கோ திரில்லர் படம் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்த்தை தூண்டும் அளவிற்கான காட்சிகள் இடம் பெறுகிறது. ஆனால் படம் தொடங்கிய சில நேரத்திலேயே கொலையாளியை போலீஸ் பிடித்து விடுவதால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு படத்தை எப்படி நகர்த்தப் போகிறார்கள் என்ற ஆவலும் எழுகிறது. இடைவேளை வரை படத்தை ஓரளவிற்கு சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு தான் படத்தின் பிரச்சினை துவங்குகிறது. கைதாகிய கொலையாளி மீண்டும் தப்பித்து, "மறுபடியும் முதலில் இருந்தா" என்ற வடிவேலுவின் காமெடியை போல மீண்டும் ஹீரோ - வில்லன் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்குகிறது. ஆனால் வலுவிழந்த திரைக்கதையும், சுவாரசியமில்லாத காட்சிகளும் நம்மை கடுமையாக சோதிக்கிறது. படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் கேரக்டரும் இடம் பெற்றிருக்கிறது ஆனால் அந்த கேரக்டரும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 மொத்தத்தில்,  சீட் திரில்லர் ஆக தொடங்கி சுமாரான திரை கதையால் சுவாரஸ்யம் இல்லாத ஒரு த்ரில்லர் படமாக முடிகிறது இந்த "இறைவன்".

விமர்சனம் : நவீன் குமார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

South Indian Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment