இரண்டம் குத்து படத்தின் டீஸர் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. படம் எந்த வகையைச் சார்ந்தது என நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இரண்டாம் குத்து படத்தின் இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார். அதற்கு தனது படத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்காக உருவாக்கியுள்ளதாகக் கூறிய சந்தோஷ், எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது, இதனை விரும்பாதவர்கள் படத்தைப் பார்க்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.
அதோடு இயக்குநர் பாரதிராஜாவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், ”சினிமாவில் சாதி ஒழிப்பு, தமிழர் பண்பாடு, பெண் சுதந்திரம், மண்ணின் பெருமை என எத்தனையோ விஷயங்களை பேசியிருக்கிறது. ஆனால் தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.
Advertisment
Advertisements
சினிமாவும் வியாபாரம் தான். சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. ஆனால் இலை மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்த விதத்தில் சரி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
’கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டில் உள்ள எத்தனை குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?
இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது. நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலை கொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் குத்து படத்தின் டீஸரை வெளியிட்டார் நடிகர் ஆர்யா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தொடர்ச்சி தான் இது. முதல் பாகத்தில் யஷிகா ஆனந்த், கெளதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். இதையடுத்து, ஆர்யா தற்போது, படத்தின் இரண்டாவது லுக்கையும், டீஸரையும் வெளியிட்டுள்ளார்.
படத்தின் டீஸரில் நிறைய அடல்ட் நகைச்சுவை ஏ ரேடட் காட்சிகள் உள்ளன. சந்தோஷ் பி ஜெயக்குமார், டேனியல் அன்னி போப், அக்ரிதி சிங், கரிஷ்மா கவுல் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ் ஆகியோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். டீசரை வெளியிட்ட ஆர்யா, ‘இந்த வகையில் ஸ்டைலிஷுடன் கூடிய பொழுதுபோக்கு படம் எடுப்பது கடினமான ஒன்றாகும். சந்தோஷ் அதில் ஒரு மாஸ்டர், அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் டார்லிங்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”