இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது இரண்டாம் குத்து. வயது வந்தவர்களுக்கான நகைச்சுவை என்பது ஒரு படத்தில் எங்காவது ஒரு இடத்தில் இருந்தால் பரவாயில்லை படம் முழுவதும் அதை வைத்தே எடுக்கப்பட்டுள்ளதால் ஆபாச வக்கிரங்களின் குப்பையாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி படங்கள் என்பது மிகவும் குறைவு. அந்த வகை படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் படங்கள் வெளியாகி உள்ளன.
இப்படியான, படங்கள் எடுப்பவர்கள், மறைவாக சொல்லப்படும் வயதுவந்தோருக்கான பாலியல் கதைகள், கிராமங்களில் நாடகங்களில் சொல்லப்படும் இரட்டை அர்த்த வசனங்களின் தன்மை ஆகியவற்றை, அதே போல, சினிமாவில் படமாக்கும்போது எந்த கலவையில் இருக்க வேண்டும் என்பதை அறியாதவர்களாகிவிடுகிறார்கள்.
சினிமாவில் அத்தகைய சரியான கலவைக்கு உதாரணம் கூறவேண்டுமென்றால் நகைச்சுவை நடிகர் விவேக்கின் சில இரட்டை அர்த்த வசன நகைச்சுவைகளைக் கூறலாம். அந்த விகிதங்களை மீறும்போது ஆபாச குப்பைகளாகிவிடுகிறது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் பி ஜெயகுமார் அந்த படத்தின் இரண்டாவது பாகமாக இரண்டாம் குத்து படத்தை இயக்கியுள்ளார்.
முதல் படத்தைப் போல, அதைவிட மோசமாக இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இரண்டாம் குத்து படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் பி கணேஷ். படம் டீசர் வெளியான போதே இந்த படம் இயக்குனர் பாரதிராஜா போன்றவர்களின் விமர்சனங்களைப் பெற்று கவனத்தைப் பெற்றது.
இரண்டாம் குத்து படத்தில், சந்தோஷ் பி ஜெயகுமார், டேனியல் ஆனி போப், மீனாள், ஷாலு ஷாமு, கரீஷ்மா கௌல், ஆகிரிதி சிங், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் கதை என்னவென்றால், நண்பர்களாக இருக்கும் சந்தோஷும் டேனியலும் திருமணம் முடிந்தவுடன் தேனிலவுக்காக தாய்லாந்து செல்கின்றனர். அங்கே அவர்கள் தங்கும் வீட்டில் பேய் இருக்கிறது. ஆசை நிறைவேறாமல் செத்துப்போனதால் அந்த பேய் இருவரையும் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், அப்படி உறவு வைத்துக்கொள்பவர்கள் இறந்துபோவார்கள் என்று கூறுகிறது. இப்படி பேய் பிடியில் மாட்டிக்கொள்ளும் இருவரும் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
படத்தில் எல்லா பாத்திரங்களும் இரட்டை அர்த்த வசனம் பேசுவதாக நினைத்து முகம் சுளிக்கும்விதமாக கொச்சையாக பேசிச் செல்கிறார்கள். பேய் படம் என்றால், கொஞ்சமாவது திகில் இருக்க வேண்டும். அப்படி பேய்களால் திகில் ஏதும் இல்லை. ஆனால், இவர்கள் கொச்சையாக பேசுவதைக் கேட்கும்போதுதான் திகில் ஏற்படுகிறது.
அடல்ட் காமெடி என்ற பெயரில் சந்தோஷும் டேனியலும் காமெடி செய்ய முயன்று கொச்சையாக பேசி படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்கள். ஓரினச் சேர்க்கை பற்றி கிண்டலும் கேலியும் சகிக்க முடியவில்லை. ஆபாச குப்பைகளை நம்பி இரண்டாம் குத்து படத்தை எடுத்திருக்கிறார் சந்தோஷ். அதோடு, மூன்றாவது பாகம் வரும் என்று காட்டுகிறார்கள். இரண்டாம் குத்துக்கே படம் பார்ப்பவர்கள் பரிதாப நிலைக்கு சென்றுவிட்டார்கள். மூன்றாவது குத்து வந்தால் அவ்வளவுதான் கதை முடிந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"