Is Master Chef copy of Cook with Comali reality show Tamil News : ஒரு சேனலில் ஏதாவதொரு நிகழ்ச்சி ஹிட் அடித்துவிட்டால் போதுமே, மற்ற சேனல்களும் அந்தப் பாதைகளைப் பின்பற்றுவது இயல்பு. சன் டிவிக்கு ‘தில்லானா தில்லானா’ என்றால், விஜய் டிவிக்கு ‘ஜோடி நம்பர் ஒன்’, கலைஞர் டிவிக்கு ‘மானாட மயிலாட’, விஜய் டிவியில் ‘சூப்பர் சிங்கர்’ என்றால், சன் டிவியில் ‘சன் சிங்கர்’ என ரியாலிட்டி ஷோ போட்டிகள் குறைவில்லாமல் நகர்கிறது.

அந்த வரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வித்தியாச முறையில் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பி, அதன்மூலம் சமையல் கத்துகிறோமோ இல்லையோ, ஸ்ட்ரெஸ் வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கும் அளவிற்கு வயிறு வலிக்க சிரிக்க முடியும் என்கிற நோக்கில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழும் ஓர் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளிதான்.
சமையல் தெரிந்தவர்களோடு, சமையலுக்கு ஸ்பெல்லிங்க்கூட தெரியாத ஆள்களை கோர்த்துவிட்டு, சுவாரசிய டாஸ்க்குகளோடு நகரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் சீசனில் அடியெடுத்து வைத்து, மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், தற்போது சன் டிவியில் ‘மாஸ்டர் செஃப்’ என்கிற சமையல் ரியாலிட்டி ஷோவின் ட்ரெயிலர் வெளியாகி, மக்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. வரலாற்றிலேயே ஒரு சமையல் நிகழ்ச்சிக்கு இந்த அளவிற்கு எதிர்பார்ப்புகள் எழுந்திருப்பது இதுவே முதல் முறை.
உலகளவில் மெகா ஹிட் அடித்து, 13 சீசன்களையும் கடந்து சென்று கொண்டிருக்கும் ஒரிஜினல் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியில் பொதுமக்கள், பிரபலங்கள், சிறுவர்கள் என வெவ்வேறு கேட்டகிரியாகப் பிரித்து நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் ஏற்கெனவே வடக்கில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து வெற்றி நடைபோடுகிறது. தெற்கில் முதல் முறையாகத் தமிழில்தான் தொடங்கவுள்ளது.

இந்தப் போட்டியின் விதிமுறைகள் என்ன, போட்டியாளர்கள் யார், நடுவர்கள் யார், பிரபலங்கள் மட்டும் பங்கேற்கப்போகும் நிகழ்ச்சியா அல்லது பொதுமக்களும் பங்கேற்கலாமா, பரிசுத் தொகை எவ்வளவு உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி என்கிற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. ‘குக் வித் கோமாளியின்’ வெற்றியை முறியடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil