கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பில் நடிகர் திலீப் மீண்டும் இணைக்கப்பட்டது தொடர்பாக தற்போது மோதல் முற்றியுள்ளது. கேரள இளம் நடிகர்கள் சங்கத்தில் இருந்து பிரிந்து தனியாக செயல்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், படப்பிடிப்பு முடித்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல மலையாள நடிகை மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனை அந்த கும்பல் செல்ஃபோனில் வீடியோவும் எடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நடிகர் திலீப்பிற்கும், நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதிற்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, திலீப் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்பு, நடிகர் திலீப் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு தாக்கல் செய்தார். இந்நிலையில், கேரள நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சிறை சென்ற காரணத்தினால் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்துநடிகர் திலீப் நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் சங்கத்தின் தலைவராக மோகன்லால் பொறுப்பேற்றதும் நடிகர் திலீப் ’அம்மா’வில் மீண்டும் இணைக்கப்பட்டார். இதை எதிர்த்து முன்னணி கதாநாயகிகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகிய 4 பேரும் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அம்மா அமைப்பின் முடிவை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/dileep759.jpg)
திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது மோதல் முற்றியுள்ளது. திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்தில் தற்போது பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது. எதிர்ப்பாளர்கள் இணைந்து புதிய சங்கத்தை தொடங்க முடிவு எடுத்திருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகரும், இயக்குனருமான ஆஷி அபு, ராஜீவ் ரவி ஆகியோர் இந்த போட்டி சங்கத்துக்கு தலைமை வகிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு, திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் சினிமா பெண்கள் கூட்டுக்குழுவும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.
நடிகர் ப்ரித்வி ராஜ், இயக்குநர் ராஜீவ் ரவி உள்ளிட்ட 100-க்கும் அதிகமானோர் ஏற்கெனவே அம்மாவில் திலீப் சேர்க்கப்பட்டதை எதிர்த்து கையெழுத்துப் போட்டு மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.