பாபு
நேற்று அஜித்தின் பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு அஜித் சார் எனக்கு உதவினார் என்று ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டார் சுசீந்திரன். அது சர்ச்சையாகியிருக்கிறது. அதற்குமுன் ஒரு சின்ன பிளாஷ்பேக்.
இயக்குனர், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் பைனான்சியர் அன்புச்செழியனின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நேரம், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, சுந்தர் சி, பாலா உள்பட பிரபல திரைத்துறையினர் அனைவரும் அன்புச்செழியன் போல் ஒருவர் உண்டா? அவர் இல்லாமல் தமிழ் சினிமா தவழக்கூட செய்யாதே என்று வாங்கிய கடனுக்கு வாய்ப்பாட்டு பாடினர். அந்த நேரத்தில் அன்புச்செழியனை எதிர்த்தும், அஜித்துக்கு அவர் கொடுத்த நெருக்கடியை நினைவூட்டியும் ஒரேயொருவர் பதிவிட்டார். அவர் இயக்குனர் சுசீந்திரன்.
எவ்வித அரசியல் பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத சுசீந்திரன், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த திரையுலகை பகைத்து அன்புச்செழியனை எதற்கு சாடினார்? நியாய உணர்வா?
சுசீந்திரனை அணுக்கமாக தெரிந்த பலரும், அஜித்தின் கவனத்தை கவரவே சுசீந்திரன் அப்படியொரு பதிவை இட்டார் என்றனர். வெண்ணில கபடிக்குழு தொடங்கி நெஞ்சிருக்கும்வரை பத்து படங்கள் இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இதில் முதலிரு படங்களான வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல இரண்டும் ஹிட். அடுத்து இயக்கிய அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சிருக்கும் வரை என ஏழு படங்களும் கமர்ஷியலாக தோல்விப் படங்கள். நடுவில் பாண்டிய நாடு படம் மட்டும் பிழைத்தது. சாதிய ஏற்றத்தாழ்வு போன்ற சமூகப் பிரச்சனைகளை மேலோட்டமாக தொட்டுச் செல்வதால், சமூகப் பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் இயக்குனர் என்ற பெயர் சுசீந்திரனை ஒட்டிக் கொண்டது. அதை வைத்தே இன்றுவரை அவர் ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவர் இயக்கிய கார்த்தி, விக்ரம் தவிர வேறு எந்த முன்னணி நடிகரும் அவரது இயக்கத்தில் நடித்ததில்லை. அஜித், விஜய்யை இயக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு உள்ளது. ஆனால், கதை சொல்லவே அவர்களை அணுக முடியவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சுசீந்திரன் குறைபட்டுக் கொண்டார்.
இந்தப் பின்னணியில் சுசீந்திரன் தனது இயல்புக்கு மீறி அன்புச்செழியனை கடிந்தபோது, அது அஜித்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு என்ற விமர்சனம் எழுந்தது இயல்பானது. நேற்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அஜித் சார் எனக்கு செய்த உதவி என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டார்.
"நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு 3 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்பொழுதுதான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜீத் சாரை சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
சுசீந்திரனின் இந்தப் பதிவு தவறு, பொய் என்று சக இயக்குனரான இலக்கியன் கடிந்துள்ளார்.
"இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித்திடம் பேசியது நான். அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக பண உதவி செய்யவில்லை. அஜித் சாரிடம் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்.’’
பி.கு : இது நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது.
வில்லன் பட சூட்டிங்" என இலக்கியன் பதிவிட்டுள்ளார்.
சுசீந்திரன் அஜித்தின் கால்ஷீட்டை பெறவே இப்படியொரு பதிவை இட்டுள்ளார் என்ற இலக்கியனின் வாதத்தை அப்படியே புறந்தள்ளுவதற்கில்லை.
இந்த சர்ச்சை காரணமாக அஜித் நல்லவரா கெட்டவரா உதவி செய்தாரா இல்லையா என்ற தேவையற்ற ஒரு கேள்வியும் ஊசலாடுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.