Islamic organization seeks ban on Udayanidhi stalin film: உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் படத்தை தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் புகார் அளித்துள்ளார்.
நடிகரும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள எப்.ஐ.ஆர் திரைப்படம் தமிழக திரையரங்குகளில் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியானது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தடா ரஹீம் கூறியதாவது: எப்.ஐ.ஆர் திரைப்பட டிரைலரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் உடனடியாக தமிழகத்தில் இப்படத்தை தடை செய்ய வேண்டும். ஏற்கனவே எப்.ஐ.ஆர் திரைப்படத்தை மலேசியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் தடை செய்துள்ளன.
குறிப்பாக இந்த படத்தை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.
இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு என எதிர்காலம் பாதிக்கப்படும்.
ஏற்கனவே இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியான துப்பாக்கி படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் படத்தை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் எச்சரித்ததாக அவர் கூறினார்.
எப்.ஐ.ஆர் படத்தை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“